There were 589 press releases posted in the last 24 hours and 153,554 in the last 365 days.

குர்திஸ் பொதுவாக்கெடுப்பும் ஈழவிடுதலைப் போராட்டமும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை !

அமெரிக்காவுக்கான குர்திஸ் தூதர் பயன் சாமி அப்துல் ரகுமான் அம்மையார் & பிரதமர் வி.உருத்திரகுமாரன்

ஒரு மக்களினத்தின் எதிர்காலத்தைத் தீர்வு செய்வதற்குப் பொதுவாக்கெடுப்புகள் நடத்துவதென்பது தெளிவானதொரு சனநாயகச் செயல்வழி.

குர்திஸ்தான், KURDISTAN, September 30, 2017 /EINPresswire.com/ --

குர்திஸ்தான் மக்களது பொதுவாக்கெடுப்பு குறித்தான அவதானிப்பு ஈழத்தமிழ் சமூகத்திடையே அதிகம் பெற்று வரும் நிலையில், இப்பொதுவாக்கெடுப்பு ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு எத்தகைய நம்பிக்கையினைத் தந்துள்ளது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குர்திஸ்தான் பொதுவாக்கெடுப்பின் முன் பின்னாக இடம்பெற்ற இடம்பெறும் சர்வதேச அரசுகளின் அரசியலை சுட்டிகாட்டி நிற்கும் இந்த அறிக்கை, ஈழத்தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊற்றாக அமைந்துள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

English: http://world.einnews.com/pr_news/406426762/kurdish-referendum-inspires-hope-among-eelam-tamils-tgte

அறிக்கையின் முழுவிபரம்:

குர்திஸ்தான் மக்கள் அண்மையில் தமது தாயகத்திலும் புலம்பெயர் குர்திஸ் சமூகத்தினிடையேயும் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்துவதில் கண்டுள்ள வெற்றியையிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அம்மக்களை வாழ்த்தி மகிழ்கிறது.

குர்திஸ்தான் மக்கள் சதாம் உசேன் ஆட்சியின்கீழ் இனவழிப்புக்கு ஆளானார்கள். இனவழிப்புக்காக சதாம் உசேன் 1986-89 காலப்பகுதியில் நடத்திய அன்ஃபெல் படையெடுப்பில் பத்தாயிரக் கணக்கான குர்து மக்கள் உயிரிழந்தார்கள். இதன் விளைவாகவும் ஈடுசெய் நீதி கேட்டல் என்ற வகையிலும் சுதந்திர அரசுக்கான குர்து மக்களின் உரிமைக் கோரிக்கை முனைப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சதாம் உசேன் வீழ்த்தப்பட்ட பிறகும் குர்து மக்கள் ஈடுசெய் நீதியின் ஒரு வடிவமாக சுதந்திரத் தனியரசு வேண்டுமென்னும் கோரிக்கையைக் கைவிடவில்லை. அவர்கள் சதாம் உசேனுக்குப் பிறகு வந்த புதிய ஆட்சியின் நல்லெண்ணத்தையோ 'நல்லாட்சி'யையோ நம்பியிருக்கவும் இல்லை, தங்கள் அரசியல் அபிலாசைகளை மாற்றிக் கொள்ளவும் இல்லை. தமக்கு இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களுக்கு அரசே காரணம் என்று முறைதவறாது கூறிவந்ததோடு அவ் ஆட்சியிலிருந்து பிரிந்து செல்லவும் முடிவு செய்தார்கள். முன்னாள் அமெரிக்க அரசதந்திரி பீட்டர் கால்பிரைத்; சொன்ன, 'உங்களுக்கு எதிராக இனவழிப்புக் குற்றம் புரிந்த நாட்டின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவீர்களா?' என்ற கூற்று இவ்விடத்தில் மிகப் பொருத்தமாகிறது.

ஒரு மக்களினத்தின் எதிர்காலத்தைத் தீர்வு செய்வதற்குப் பொதுவாக்கெடுப்புகள் நடத்துவதென்பது தெளிவானதொரு சனநாயகச் செயல்வழி. குர்து மக்களின் தலைமை திரும்பத் திரும்பத் கூறியது போல, பொதுவாக்கெடுப்புகளைத் தொடர்ந்து உடனே விடுதலை வந்து விடாது. பொதுவாக்கெடுப்புகளுக்குப் பின் உரிய பங்காளர்களிடையே தனித் தனியாகவும் மொத்தமாகவும் உரையாடல்கள் நடைபெற வேண்டும். இராக்கிய அரசாங்கமும், பிராந்திய, சர்வதேச அரசுகளும் தனியரசு தவிர்த்த மறுசலுகைகளை வழங்க விருப்பம் தெரிவித்திருப்பதன் ஊடாகத் தெளிவாகத் தெரிய வரும் செய்தி என்னவென்றால், பொதுவாக்கெடுப்புக்கு அல்லது, பொதுவாக்கெடுப்பு நடத்தும் முயற்சிகளுக்கே கூட, பேரம்பேசும் வலுவுண்டு என்பதாகும்.

குர்திஸ் பொதுவாக்கெடுப்பு விடயத்தில் மிகமுக்கிய அம்சமாக அமைவது குர்திஸ்தான் தலைவர் பர்சானி அவர்கள் சற்றும் அசைந்து கொடுக்காமல் உறுதியாகச் செயல்பட்டார் என்பதாகும். பொதுவாக்கெடுப்பு நடத்த முற்பட்டால் பொருளியல் தடைகள் விதிப்போம், இராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று இராக்கிய அரசாங்கம் மட்டுமன்று, பிராந்திய அரசுகளும் உலக அரசுகளும் அனைத்துலக நிறுவனங்களும் கூட அச்சுறுத்தின. பொதுவாக்கெடுப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் இராக்கிய உச்ச நீதிமன்றம் அறிவித்தது. பொதுவாக்கெடுப்பு காரணமாய் வன்முறை தலையெடுக்குமானால் படை வலிமையைப் பயன்படுத்தப் போவதாக பாக்தாத் அரசாங்கம் மிரட்டியது.

எண்ணெய் வளமிக்கதும் போட்டா போட்டிக்குரியதும் அரபியர்களும் துருக்கியர்களும் கூட வாழ்ந்து வரும் கிற்குவிக் பகுதியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டதும் இவ்விடத்தில் குறிப்பிடப்பட வேண்டியது. துருக்கி அரசு குர்திஸ்தான் எல்லையை நோக்கித் தனது இராணுவத் தாங்கிகளை நகர்த்தியது. பொதுவாக ஏற்கப்பெறும் தமிழீழ நிலப்பரப்பைப் போலல்லாமல் குர்திஸ்தான் ஒரு நிலஞ்சூழ்ந்த நாடு. ஈரானும் தனது வான்வெளியை மூடியது. பொதுவாக்கெடுப்பு நடத்த முற்பட்டால் குர்திஸ்தானுக்குத் தரப்படும் அரசதந்திர ஆதரவையும் உதவியையும் குறுக்கிக் கொள்ள நேரிடலாம் என்று அமெரிக்கா எச்சரித்தது. இது மீள்கட்டுமான முயற்சிகளையும் குலைத்து விடும் என்று எச்சரித்த ஐநா பொதுச்செயலர் அந்தோணியோ குத்தேரஸ், குர்திஸ்தான் தலைமை பொதுவாக்கெடுப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் குர்திஸ் தலைவர்கள், முதலாம் உலகப் போர் தொடக்கம் தாங்கள் நடத்தி வரும் போராட்டத்தின் வரலாற்றையும், அனைத்துலக அரசுகளின் துரோகத்தையும் கணக்கில் கொண்டு 'நம்மை யாரும் காக்க மாட்டார்கள், நமக்குத் துணை நாமே என்பதை குர்து மக்கள் அறிவார்கள்' என்று கூறி விட்டனர்.

அரசல்லாத செயற்பாட்டாளர்கள் தற்சார்பாகவே களத்தில் நிகழ்வுகளைத் தோற்றுவிக்க முடியும் என்ற உண்மை மெல்ல மெல்ல மலர்ந்து வருவதை குர்திஸ் பொதுவாக்கெடுப்பு காட்டி நிற்கின்றது. கடந்த 1991ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் சோவியத்து ஒன்றியம் உடைவதற்கு எதிராக உக்ரைனை எச்சரித்தார் என்பதையும், குரோவேசியாவில் நடந்த பொதுவாக்கெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்க அயலுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை, அமெரிக்கா யுகோஸ்லாவியாவின் ஆள்புல ஒருமைப்பாட்டைக் காக்க உறுதி பூண்டிருப்பதாகக் கூறியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும் இன்று உக்ரைன், குரோவேசியா இரண்டுமே சுதந்திர நாடுகளாகவும் அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டுள்ளவையாகவும் விளங்குகின்றன. இன்று ரஷ்ய விரிவாக்கத்துக்கு எதிராக உக்ரைன் தனது ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

பொதுவாக்கெடுப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அமெரிக்காவுக்கான குர்திஸ் தூதர் பயன் சாமி அப்துல் ரகுமான் அம்மையார், தமது அதிபர் பர்சானி மலைப் பாறை போல் உறுதியாக இருப்பதாகச் சொன்னார்.

ஈழத் தமிழர்களாகிய நாமும் நமது சுதந்திரத்தின் மீது மலைப் பாறை போல் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போமானால், ஐநாவின் முகப்பில் தமிழீழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Contact: pmo@tgte.org

English: http://world.einnews.com/pr_news/406426762/kurdish-referendum-inspires-hope-among-eelam-tamils-tgte

Transnational Government of Tamil Eelam
TGTE
+1212-290-2925
email us here