There were 1,533 press releases posted in the last 24 hours and 469,500 in the last 365 days.

அனைத்துலக மகளிர் நாளை உலகம் கொண்டாடும் வேளை, தமிழ்ப் பெண்கள் “கற்பழிப்பு முகாம்களில்”: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

CHENNAI, INDIA, March 7, 2017 /EINPresswire.com/ --


மார்ச்சு 8ஆம் நாள் அனைத்துலக மகளிர் நாளை உலகம் கொண்டாடும் வேளை, தமிழ்ப் பெண்கள் சிறிலங்க இராணுவம் நடத்தும் “கற்பழிப்பு முகாம்களில்” அடைபட்டுள்ளார்கள் என்கிறார் நாடு கடந்த தமிழீழ் அரசாங்கத்தின் மகளிர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ்.

“தமிழ்ப் பெண்களின் துயரக் கதையில் இது கடைசியாக வந்துள்ள செய்தி. போரில் கணவரை இழந்த 90 ஆயிரம் கைம்பெண்களும் மற்றவர்களும் தங்களிடம் முறைகேடு செய்து, தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரையும் பறித்த பாதுகாப்புப் படையினருக்கு நடுவில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.”

பன்னாட்டு உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் அண்மைய அறிக்கை சிறிலங்க இராணுவம் நடத்தும் “கற்பழிப்பு முகாம்களில்” தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக அடைபட்டுக் கிடப்பது பற்றிய விவரங்களை வெளியிட்டது.
இந்த அறிக்கை சொல்வதாவது:

“மூத்த அதிகாரி ஒருவர் அறைக்குள் வந்தார். உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறப்பட்டது – ஏதோ இறைச்சிக் கடையில் நாங்கள் கறித் துண்டுகள் போல். அவர் சுற்றுமுற்றும் பார்த்து என்னைத் தேர்ந்தெடுத்தார். அடுத்த அறைக்கு அழைத்துச் சென்று என்னைக் கற்பழித்தார்.”

”இந்தப் பெண்களில் இருவர் ஓர் அறையில் தங்களைக் குழுவாக அடைத்து, எந்தச் சிப்பாய் வேண்டுமானாலும் அங்கு வந்து ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துப் பக்கத்து அறைக்கோ கூடாரத்துக்கோ அழைத்துச் சென்று கற்பழிக்கக் கூடிய நிலையில் வைக்கப்பட்டிருந்ததை விவரிக்கின்றனர்” என்கிறது பன்னாட்டு உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) என்ற அமைப்பு.

பன்னாட்டு உண்மை மற்றும் நீதித் திட்டம் இராணுவத்தில் கற்பழிப்புக் குற்றமும் சித்திரவதைக் குற்றமும் புரிந்ததாகச் சொல்லப்படும் ஒரு மேஜர், ஒரு லெப்டினண்ட் கர்னல் உள்ளிட்ட ஆறு இராணுவத்தினர் பற்றிய விவரங்களையும் வழங்கியது.

விவரங்கள்: http://www.jdslanka.org/index.php/news-features/human-rights/669-un-told-of-sri-lanka-military-operating-qrape-campsq

தமிழ்ப் பெண்கள் சந்திக்கும் பிறவகை முறைகேடுகள்:

சிறிலங்கப் பாதுகாப்புப் படைகள் தமிழ்ப்பெண்களுக்கு எதிராகப் பெருந்திரள் படுகொலைகளும் பெரிய அளவிலான கற்பழிப்பும் செய்துள்ளன. இந்த முறைகேடுகளைச் செய்த அதே பாதுகாப்புப் படையினர் தமிழ்ப் பகுதிகளில், அவர்கள் பாலியல் வன்செயல் புரிந்த அதே பெண்களுக்கு இடையில் இன்றளவும் பெருந்தொகையாக நிறுத்தி வைக்கப்ப்பட்டுள்ளனர். படையாட்களுக்கு நடுவில் அச்சத்துடனும் அவமானத்துடனும் வாழ்ந்து, அவர்கள் அரசாங்கத்தின் முழுப் பாதுகாப்புடனும் ஆதரவுடனும் சுதந்திரமாக நடமாடுவதையும் காண வேண்டியவர்களாய் உள்ளனர் என்றார் திருமதி பாலாம்பிகை முருகதாஸ்.

“போர் முடிந்து ஏழாண்டுகள் கடந்து போய் விட்டன. ஆனால் ஒரே ஒரு படையாள் கூட நீதியின்முன் நிறுத்தப்படவில்லை. ஐநா கட்டளைப்படியான விசாரணையிலிருந்தும் கூட படையினரைக் காப்பாற்றவே அரசாங்கம் முயன்று வருகிறது. தற்சார்பான பல வட்டாரங்களிலிருந்தும் கிடைக்கும் செய்தியின்படி, தமிழ்ப் பகுதிகளில் ஐந்து குடிமக்களுக்கு ஒரு படையாள் என்ற விகிதம் காணப்படுகிறது. இதுதான் உலகிலேயே குடிமக்களுக்குப் படையாள் என்ற கணக்கில் மிக உயர்ந்த விகிதம் ஆகும்.”

மேலும், கணவனையும் மகள்களையும் மகன்களையும் பாதுகாப்புப் படைகளிடம் சரணடையச் செய்த ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் தங்கள் அன்புக்குரியவர்களை அதன் பிறகு பார்க்கவே இல்லை. சரணடைந்தவர்கள் உயிருடனில்லை என்று சொல்லி விட்ட சிறிலங்கப் பிரதமர் அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்று கூடுதல் தகவல் தர மறுத்து விட்டார். அவர் தொடர்ந்து பாதுகாப்புப்படைகளைப் பாதுகாத்து வருகிறார் என்றார் திருமதி பாலாம்பிகை முருகதாஸ்.
”போரில் கணவரிழந்த 90,000 தமிழ்க் கைம்பெண்களின் துன்பம் தொடர்கிறது. ஒருபுறம் கணவரை இழந்து வாழும் வேதனை, குழந்தைகளைப் பேணி வளர்ப்பதிலுள்ள பெரும் இடர்ப்பாடு, மறுபுறம் கணவரைக் கொன்ற அதே படையாட்களிடமிருந்து மிரட்டல், அச்சுறுத்தல், முறைகேடு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.”

போர்க் காலத்தில் பெருந்தொகையான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்தாக்குக்கும் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்ட போது தற்காலிகப் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்த இப்போதையக் குடியரசுத் தலைவர் எவ்வித ஐநா புலனாய்வையும் உறுதியாக நிராகரித்து, பாதுகாப்புப் படையினரை எவ்விதத் தண்டனையிலிருந்தும் பாதுகாக்க வெளிப்படையாக உறுதியளித்துள்ளார்.

மேலும், பாதிப்புற்ற மக்களும் தமிழ்த் தலைவர்களும் ஐநா மனித உரிமை மன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்:

1) ஐநா மனித உரிமை மன்றம் பொறுப்புக்கூறல் குறித்து ஒருமனதாக இயற்றிய 30/1 தீர்மானத்தில் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த உறுதியைக் காப்பாற்றுவதற்கான 2017 மார்ச்சு காலக்கெடுவைக் கடந்து எவ்விதக் காலநீட்டிப்பும் தர வேண்டாம் என உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இந்தத் தீர்மானத்தை சிறிலங்கா தானே தன்னார்வமாய்ப் பிறருடன் சேர்ந்து கூட்டாக முன்மொழிந்ததோடு, தீர்மானத்தின் கடப்பாடுகளை 2017 மார்ச்சு மாதத்துக்குள் முழுமையாக நிறைவேற்றவும் உறுதியளித்தது. கால நீட்டிப்புகளும், சலுகைக் காலங்களும் முன்பே தரப்பட்ட போதிலும் எந்த முனையிலும் முன்னேற்றம் என்பதே இல்லை.

2) எம்மைக் காக்கவும், எமக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கவும் ஒரே வழி -- வட கொரியாவின் மானிட விரோதக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக் கடைப்பிடித்த நடைமுறை போல் -- சிறிலங்காவை ஐநா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புவதும், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு அல்லது சிறப்பு அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்குமாறு பரிந்துரை செய்வதும்தான்.

தமிழர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து:

எவ்வகையில் கால நீட்டிப்பு வழங்கினாலும், சிறிலங்கா அரசாங்கம் எவ்வித அச்சமும் இல்லாமல் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் செய்யத் துணிவும் ஊக்கமும் அளிப்பதாகி விடும், இதனால் தமிழர்களின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகும் என்று அஞ்சுகிறோம். பெருந்திரளான படுகொலைகளும் பாலியல் வன்செயலும் புரிந்த பல்லாயிரம் சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் இன்றளவும் தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு, பாதிப்புற்றோரின் நடுவில் வாழ்ந்து வருகின்றனர். தமிழர்களுக்கு எதிராக இப்போது நிகழ்ந்து வரும் உரிமைமீறல்கள் குறித்துப் பல செய்திகள் வந்துள்ளன. சித்திரவதை, கொடிய, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடத்துமுறை அல்லது தண்டனைமுறை பற்றிய ஐநா சிறப்பு அறிக்கையாளர் திரு யுவான் மெண்டிஸ் அண்மையில் தந்துள்ள அறிக்கையைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

விவரங்களுக்கான இணைப்பு:

http://world.einnews.com/pr_news/369076202/sri-lanka-war-crimes-tamil-leaders-and-victims-jointly-urge-un-not-to-give-extention-and-refer-to-un-general-assembly


Balambihai Murugadas
Transnational Government of Tamil Eelam (TGTE)
+44-7896-588-369
email us here