There were 1,725 press releases posted in the last 24 hours and 402,416 in the last 365 days.

உலகப்பந்தில் தமிழீழத் தனியரசு தனக்கான இடத்தைப் பிடிக்கும் - பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

"தமிழீழ தேசியக்கொடி நாள் உரையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழீழத் தேசத்தின் கொடி தமிழீழ நாட்டுக்கான கொடியாகவும் பட்டொளி வீசிப்பறக்கும் என தெரிவித்துள்ளார்"

NEW YORK CITY, UNITED STATES OF AMERICA, November 22, 2021 /EINPresswire.com/ --

உலகின் புவிசார் அதிர்வுகளிள் விளைவாகவும், சுதந்திர வேட்கையின் பயனாகவும், உலகப்பந்தில் ஒரு நாள் தமிழீழத் தனியரசு தனக்கான இடத்தைப் பிடிக்கும் என தமிழீழ தேசியக்கொடி நாள் உரையில் தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், அப்போது தமிழீழத் தேசத்தின் கொடி தமிழீழ நாட்டுக்கான கொடியாகவும் உலகப்பரப்பெங்கும் பட்டொளி வீசிப்பறக்கும் தெரிவித்துள்ளார்.

உலகில் அமைந்துள்ள தேசங்கள் எல்லாம் தமக்கானதொரு தனியரசை இதுவரை அமைத்துவிடவில்லை. அரசாக அமைந்த தேசங்கள் மட்டுமன்றி அரசற்ற தேசங்களும் தமது விடுதலையை அவாவை தமது தேசியக் கொடிகள் மூலம் வெளிப்படுத்தி நிற்கிறார்கள் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

உரையின் முழுவடிவம் :

https://youtu.be/PN7-kWGeXdU

இன்று தமிழீழத் தேசியக்கொடி நாள்.

1990 ஆம் ஆண்டு இரண்டாவது மாவீரர் நாளையொட்டி நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் இதே நாளில் தமிழீழத் தேசியக்கொடி பிரகடனம் செய்யப்பட்டதை மனதில் நிறுத்தி அத் தேசியக்கொடியை அதற்குரிய அனைத்து மரியாதையோடும் போற்றிக் கொண்டாடும் வகையில், 2021 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 21 ஆம் நாளை, தமிழீழத் தேசியக்கொடி நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை பிரகடனம் செய்திருக்கிறது.

தமிழீழத் தேசியக் கொடி அறிமுகம் செய்யப்பட்டமை குறித்து அந்நேரம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமது பத்திரிகையான விடுதலைப்புலிகள் பத்திரிகையில் «தேசிய சுதந்திரத்தை வேண்டி நிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்துக்கு ஒரு தேசியக்கொடி இன்றியமையாதது. தேசிய தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக்கொடி சித்தரித்துக் காட்டுகிறது. தேசாபிமானத்தின் சின்னமாகவும் அது திகழ்கிறது. அரசியல் சுதந்திரத்தின் ஆணிவேரான குறியீடாகவும் தேசியக்கொடி அமைகிறது» என முரசறைந்திருந்தது.

தேசியக்கொடியின் நிறங்களாக மஞ்சள், சிவப்பு கறுப்பு நிறங்கள் அமைந்திருப்பதற்கான காரணங்கள் குறித்தும் விடுதலைப்புலிகள் அமைப்பு மக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.

தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்தத் தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் தனியானதொரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு தன்னாட்சி உரிமை உண்டு. இந்தத் தன்னாட்சி உரிமை அவர்களின் அடிப்படையான அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து. தன்னாட்சி உரிமையினை நிலைநிறுத்துவதற்காகத் தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதனை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கிறது எனவும்,

தேசிய சுதந்திரம் பெற்று தமிழீழத் தனியரசை அமைத்து விட்டாற்போல நாம் முழுமையான சுதந்திரம் பெற்றதாகக் கொள்ள முடியாது. தமிழீழ சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். வர்க்க சாதிய முரண்பாடுகள் அகற்றப்பட வேண்டும். பெண்அடிமைத்தனம் நீக்கப்பட வேண்டும். அதற்கு சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமத்துவமும் சமதர்மமும் சமூகநீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். இப்படியான புரட்சிகரமான மாற்றத்தை வேண்டிய அரசியல் இலட்சியத்தை சிவப்பு நிறம் குறியீடு செய்கிறது எனவும்,

விடுதலைப்பாதை கரடுமுரடானது. சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இத்தனையையும் தாங்கிக் கொள்ள இரும்பு போன்ற இதயம் வேண்டும். அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். அதற்கு என்றும் தளராத உறுதி வேண்டும். கறுப்பு நிறம் மக்களின் மனஉறுதியினைக் குறித்துக் காட்டுகிறது எனவும்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.

தமிழீழ மக்களின் சுதந்திரவேட்கை அறத்தின்பாற்பட்டது என்பதன் குறியீடாய், தேசிய விடுதலை மட்டுமன்றி சமூக விடுதலையை எட்டியவர்களாய் தமிழீழ மக்கள் வாழ்வதற்கு சமத்துவமும் சமூகநீதியும் நிலவும் புரட்சிகர சமூகத்தை உருவாக்கும் அரசியல் இலக்கின் குறியீடாக, எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு விடுதலையை அடைய வேண்டும் என்ற மக்களின் உறுதியின் குறியீடாக அன்றுமுதல் எமது தமிழீழத் தேசியக்கொடி நிமிர்ந்து நிற்கிறது.

நமது தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ மக்கள் அனவரும் உணர்வோடும் எழுச்சியோடும், தமிழீழத் தனியரசை அமைத்திடும் உறுதியோடும் நம் கைகளில் ஏந்தி நிற்க வேண்டும்.

அன்பான மக்களே,

தேசியக்கொடி என்பது தேசங்களின் கொடி. அந்தத் தேச மக்களின் கொடி. உலகில் அமைந்துள்ள தேசங்கள் எல்லாம் தமக்கானதொரு தனியரசை இதுவரை அமைத்துவிடவில்லை. அரசாக அமைந்த தேசங்கள் மட்டுமன்றி அரசற்ற தேசங்களும் தமது விடுதலையை அவாவை தமது தேசியக் கொடிகளை ஏந்தி நிற்கிறார்கள்.

உலகில் உள்ள தேசங்களின் மக்கள் தமது தேசப்பற்றை வெளிப்படுத்தவும், தம் தேசத்தை உலக அரங்கில் பிரதிநிதித்துவம் செய்யவும், தமது தேசங்களின் பெருமையினைக் கொண்டாடுவதற்கும் கொடியை ஏந்தி நிற்பார்கள். தேசங்களின் மகிழ்வின் போது தேசியக்கொடியினை தலைநிமிர்த்தியும் துயரத்தின் போது தலைதாழ்த்தியும் தமது உணர்வினை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

தமிழீழ மக்களுக்கு எமது தாயகத்தில் இத் தேசியக் கொடியினை ஏந்தி நிற்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் எமது தமிழீழ தேசம் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்;டிருப்பதால் தமிழீழத் தேசியக்கொடியினை ஏந்தி நிற்கும் அடிப்படை அரசியல் உரிமை எமது மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

தாயகத்தில் வாழும் தமிழீழ மக்கள் தமிழீழத் தேசியக் கொடியினை ஏந்தி நிற்கும் உரிமையினை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

நம் தேசத்தின் தேசியக் கொடியினை, நமது மாவீரர்கள் ஏந்தி நின்ற கொடியினை,
உலக வரலாறு கண்டிராத வீரத்தினதும் ஈகத்தினதும் குறியீடாக அமைந்திருக்கும் நமது தேசியக் கொடியினை,

போர்க்களத்தில் நமது வீரர்கள் அடைந்த வெற்றிகளின்போது பட்டொளி வீசிப்பறந்த நமது தேசியக்கொடியினை,

தமிழீழ தேசத்தின் தேசியநிகழ்வுகளில் எல்லாம் தேசியக்கொடிப் பாடலுடன் கம்பீரமாக ஏறிநின்ற நமது தேசியக்கொடியினை,

புலம் பெயர்நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தத்தமது நாட்டுக் கொடிகளுக்கு நிகராக ஏற்றி மகிழ்ந்து கொண்டாடி வரும் கொடியினை,

மாவீரர் நாளில் நாம் வணங்கி நிற்கும் கொடியினை,

நாம் இன்றைய நாளில் தமிழீழத் தேசியக்கொடிக்குரிய நாளாக இந்நாளைப் பிரகடனம் செய்து ஒன்று கூடி எமது கொடியினை பெருமையுடன் ஏந்தி நிற்கிறோம் என்பது எத்தனை தடைகள் வந்தாலும் மனித அறத்தின் பாற்பட்ட தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்டையில் அமைந்த தனியரசு அமைக்கும் உரிமையினையும், சமூகநீதி நிலவும் சமூகத்தைப் படைப்பதில் எமக்குள்ள பற்றுறுதியினையும், எமது மக்களின் தளராத மனஉறுதியினையும் எவராலும் தகர்க்க முடியாது என்பதனை உலககெங்கும் முரசறைந்து கொள்வதற்குத்தான்.

எமது மக்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் நாம் உடைத்தெறியத் திடசங்கற்பம் பூண்டிருக்கிறோம் என்பதன் வெளிப்பாடாய் தான் நாம் தமிழீழத் தேசியக்கொடியினை ஏந்தி நிற்கிறோம்.
சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமையப்போவது காலத்தின் நியதி. வரலாற்றின் கட்டாயம். உலகின் புவிசார் அதிர்வுகளிள் விளைவாக, தமிழீழ மக்களின் சுதந்திரவேட்கையின் பயனாக ஒரு நாள் உலகப் பந்தில் தமிழீழத் தனியரசு தனக்கான இடத்தைப் பிடிக்கும்.

அப்போது தமிழீழத் தேசத்தின் கொடி தமிழீழ நாட்டுக்கான கொடியாகவும் உலகப்பரப்பெங்கும் பட்டொளி வீசிப்பறக்கும்.

வாழ்க தமிழீழத் தேசியக்கொடி.
வாழ்க தமிழீழ மக்கள்.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனதுரையில் தெரிவித்துள்ளார்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1-614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter
LinkedIn