There were 1,802 press releases posted in the last 24 hours and 400,272 in the last 365 days.

நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்க தேசமாக எழுவோம் ! எழுகதமிழ் எழுச்சிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவுகின்றது !!

எதிர்வரும் செப்ரெம்பர் 16ம் நாள், யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெறுகின்ற எழுகதமிழ் எழுச்சி நிகழ்வில் தேசமாக தாயக உறவுகள் பங்கெடுக்க வேண்டுகின்றோம்.

ஈழத்தமிழர் தேசமும், தனது நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை வென்றடைய, நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுத்த வேண்டிய காலமாக இது உள்ளது”
— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
NEW YORK, UNITED STATES OF AMERICA, September 13, 2019 /EINPresswire.com/ --

நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது போராட்ட வேட்கையில் நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில், நமது அறவலிமையினை அரசியல் வலிமையாக மாற்ற, எழுகதமிழாய் எழுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுக்கின்றது.

எதிர்வரும் செப்ரெம்பர் 16ம் நாள், யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெறுகின்ற எழுகதமிழ் எழுச்சி நிகழ்வில் தேசமாக தாயக உறவுகள் பங்கெடுத்து, மக்கள் சக்தியின் வலிமையினை உலகிற்கு உரத்து ஒலிக்க வேண்டுகின்றோம்.

தாயக மக்களின் போராட்டத்திற்கு வலுவூட்ட நியு யோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்னேயும், தமிழ்நாட்டிலும் எழுகதமிழாக அணிதிரளும் நாம், சமவேளை ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலிலும் ஒன்றுகூடுகின்றோம்.

தமக்குள்ள ஜனநாயக வெளியில் தமக்கான கோரிக்கைகளுடன் உலக மக்கள் உறுதியுடன் ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்சின் மஞ்சள் அங்கிப் போராட்டம், அரபு வசந்தத்தின் மக்கள் போராட்டம், சமகாலத்தில் கொங் கொங்கில் எழுந்துள்ள மக்கள் போராட்டம் என யாவுமே மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பனை உலகிற்கு மீண்டுமொருமுறை வெளிக்காட்டி வருகின்றன. தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக், களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டங்கள்; உணர்த்தி நிற்கின்றன.

ஈழத்தமிழர் தேசமும், தனது நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை வென்றடைய, நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுத்த வேண்டிய காலமாக இது உள்ளது என நமது புத்தாண்டுச் செய்தியில் அறைகூவியிருந்தோம்.

முள்ளிவாய்க்காலின் பின்னரான இப்பத்து ஆண்டுகளில் அனைத்துலக அரசுகளின் உதவியுடன் தனது தமிழின அழிப்புக்கான பொறுப்புக்கூறலில் இருந்தும், அதற்கான பரிகாரநீதியினை வழங்குவதில் இருந்தும் சிறிலங்கா அரசு தப்பித்து வருவதோடு, தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்கின்ற பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகின்றது.

சிறிலங்கா அரசாங்கங்கள் எவையாக இருந்தாலும் தமிழின அழிப்பையோ, அல்லது தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதனையோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதனால் தமிழ் மக்கள் சிங்கள அரசாங்கங்களின் நிலைப்பாட்டை எதிர்த்து தொடர்ச்சியாக விட்டுக் கொடுப்பற்ற போராட்டத்தை நடாத்துவது தவிர்க்க முடியாத வரலாற்று நிரப்பந்தமாக ஈழத்தமிழர் தேசத்துக்குள்ளது.

நாம் ஒன்றுபட்டவர்களாக, ஒருமித்தவர்களாக ஒற்றுமையுடன் அணிதிரளும் போது, இலங்கைத்தீவினை மையப்படுத்திய சர்வதேச புவிசார் அரசியலில் நம்மையும் ஒரு தரப்பாக வலுப்படுத்துவதற்குரிய அரசியல் சக்தியினைப் பெறமுடியும். தாயக மக்கள், புலம்பெயர் மக்கள், தமிழ் நாட்டு உறவுகள் என உலகத்தமிழர்கள் அனைவரும் ஒற்றைக்குரலாக அணிதிரண்டு எமக்கான சக்தியினை வலுப்படுத்த வேண்டிய காலமாகவுள்ளது.

சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல் அரசியல் பாதையில் பயணித்து வரும் தாயக தமிழர் அரசியற்தரப்புக்களது முரண்பாடுகளுக்கு அப்பால், ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தின் அற வலிமையினை அரசியல் வலிமையாகவும், அறிவு வலிமையாகவும் மாற்ற, நாம் அனைவரும் ஒற்றைக்குரலாக ஒலிப்போம்.

தேசமாக நாம் அனைவரும் எழுகதமிழில் பங்கெடுத்து நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்க, நீதிக்கும் சக்தியாக மாறுவோம்.


தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்


அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Transnational Government of Tamil Eelam
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
+33 7 55 16 83 41
email us here