There were 1,481 press releases posted in the last 24 hours and 438,418 in the last 365 days.

ஜெனீவா : சிறிலங்கா விவகாரத்தில் அடுத்து என்ன ? - சுதன்ராஜ்

PARIS, FRANCE, February 4, 2019 /EINPresswire.com/ --

ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு இன்னமும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பிலான விடயங்கள் அனைத்துலக அரங்கிற்கு வரத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக சிறிலங்காவுக்கு வழங்க்கப்பட்ட இரண்டு ஆண்டுகால மேலதிக அவகாசம் இக்கூட்டத் தொடருடன் நிறைவுறவுள்ள நிலையில் அடுத்த என்ன என்பதே மிக முக்கியமானதாகவுள்ளது. இப்பத்தியில் இது பற்றி பல தடவைகள் பேசிவிட்டோம். இருப்பினும் அது மீண்டும் மீண்டும் பேசப்பட வேண்டிய விடயமாக உள்ளது. காரணம் தமிழர்களின் நீதிக்கான செயல்வழிப்பாதையில் ஐ.நா மனித உரிமைச்சபை முக்கிய ஒரு களமாகவுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு 'ஜெனீவா' ஒரு தலையிடியாகவே உள்ளது என்பதனையும் உணரமுடிகின்றது. காரணம் ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானத்துக்கு ஒத்துக் கொண்ட விடயங்கள் பெரும் பட்டியலாக உள்ள நிலையில், அதன் நடைப்பாடுகள் தொடர்பில் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் சிறிலங்கா உள்ளது.

இச்சூழலில் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரை மையப்படுத்தி பல விடயங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இதில் குறிப்பாக சிறிலங்காவின் தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பில் வெளியிட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஆதார ஆவணம் முக்கியத்துவம் உள்ளதாக உள்ளது.

குறிப்பாக அனைத்துலக நீதிமன்றங்களில் அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ வழக்கு தொடுப்பதற்கு உரிய ஆவணங்களுக்கு மேலாக போதுமான போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் , மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா விவகாரத்தில் காணப்படுவதாக அந்த அமைப்பு ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது.

இது படங்கள், சமகால குறுஞ்செய்திகள், இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்ட சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் போர் முடிவடைந்த பின்னர் உண்மையை மறைப்பதற்காக இணையத்தில் இருந்து அழிக்கப்பட்டு நீக்கப்பட்ட உத்தியோகபூர்வ இராணுவ வெளியீடுகளின் ஆதாரங்கள் இவற்றுடன் கடந்த ஐ நா விசாரணை அறிக்கைகளின் கண்டுபிடிப்புகள் பற்றிய வரைபுகளையும் ஒன்று சேர்த்து இந்த ஆவணம் வெளிவந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர்களின் போது, அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்ட அமைப்பு தொடர்சியான உப-மாநாடுகளை ஜெனீவாவில் நடத்தி வருகின்றது. இதில குறிப்பாக வவுனியா ஜோசப் முகாம் தொடர்பிலான ஆவணம் மிக முக்;கியமானது.

இந்நிலையில் தற்போது இந்த ஆவணத்தினை மையப்படுத்தி ஜெனீவாவில் மற்றுமொரு உப-மாநாடு இடம்பெற இருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், மன்னாரில் தோண்டத் தோண்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் ஜெனீவாவில் பேசுபொருளாக மாறுவதற்கான சூழலும் காணப்படுகின்றது. இதனை ஐநா மனிதவுரிமை ஆணையருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையூடாக உணர முடிகின்றது.

புதைகுழியைப் பார்வையிட ஐ.நாவின் கண்காணிப்பாளர்களை மன்னாருக்கு அனுப்ப வேண்டும் என்பது இக்கோரிக்கையின் முக்கியமான ஒன்றாகவுள்ளது. தடயங்கள் அழிக்கப்படுவதற்கு புலனாய்வறிஞர்களளை முள்ளிவாய்க்காலுக்கு ஐ.நா அனுப்பி வைக்க வேண்டு என்ற கோரிக்கை முன்னர் வைக்கப்பட்டிருந்தது.


தற்போது இக்கோரிக்கை மான்னாரை நோக்கி எழுந்துள்ளது.

'நீங்கள் ஈடுபாடு கொள்ளா விட்டால், இந்தச் சான்றுகளையும் எலும்புக்கூடுகளையும் முந்தைய புதைகுழிகளில் செய்தது போல் சிதைத்தோ அழித்தோ விடுவார்கள் என்று கவலைப்படுகிறோம்' ஐ.நா ஆணையாளருக்கான கோரிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில், இலங்கையின் வடபுலத்தில் மன்னாரிலல் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பாரிய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக எழுதுகிறேன். இந்தப்பாரிய புதைகுழியில் இதுவரை 12 அகவைக்குட்பட்ட 23 குழந்தைகள் உட்பட 300 பேரின் எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலரைக் கட்டிப் போட்டு படுகொலை செய்திருப்பது போல் தெரிகிறது.

உடலங்களைக் கல்லறையில் போல் அருகருகே வரிசையாக அடக்கம் செய்யாமல் குவித்துப் போட்டுப் 'புதைத்து' முடித்திருப்பதும் காண முடிகின்றது.

குறித்த இப்பகுதி போர்க் காலத்தில் சிறிலங்கப் அரச படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், அருகில் உள்ள ஒரு கட்டடத்தில்தான் இராணுவ உளவுத்துறையின் தளம் இருந்துள்ளது என்றும் ; உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள்.

பத்தாண்டு முன்பு போர் முடிந்து விட்டது என்றாலும் இப்போதும் தமிழ்ப் பகுதிகளில் பெருந்தொகையான சிறிலங்கா அரச படையினர் ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் சான்றுகளைச் சிதைக்கக் கூடும் என்ற கவலைகள் உள்ளன. சிறிலங்கா படையினர் பலரும் ஆட்களைக் காணாமற்செய்தல், கொலை, பாலியல் வல்லுறவு ஆகிய குற்றங்கள் புரிந்திருப்பதாக ஐநா மற்றும் பல்வேறு வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

போர்க்காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டதான பல அறிக்கைகள் உள்ளன. 2009 மே மாதம் போர் முடிவில் சிறிலங்கா அரச படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட, நம்பிச்சென்ற ஏராளமானோரும் இதிலடங்குவர். பலர் குழந்தைகளோடும் சிறுவர் சிறுமியரும் உள்ளனர். இவர்களில் சிலர் அங்கே புதைக்கப்பட்டிருப்பார்களோ என்று கவலை உள்ளது. குறிப்பாக 12 அகவைக்குட்பட்ட 23 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கவலைக்குரியவை. அவை போர்முடிவில் சிறிலங்கா படையினரிடம் நம்பிச்சென்ற குழந்தைகள், சிறுவர் சிறுமியரின் எலும்புக் கூடுகளாகவே இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

அடுத்தடுத்து வந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள், அரசாங்கத் தரப்பிலான உரிமை மீறல்களை 'இல்லை' என்று மறுப்பதையும், பலவேளைகளில் விசாரணைகளுக்கு இடைஞ்சல் செய்வதும், சான்றுகளை அழிப்பது உட்படப் பன்னாட்டுக் குற்றங்களை மூடிமறைக்க முனைகின்றவர்களாக காணப்படுகின்றனர்.

ஐநா மனிதவுரிமைப் பேரவையில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 30-1 தீர்மானத்தை, சிறிலங்காவும் பிற அரசுகளோடு சேர்ந்து கூட்டாக முன்மொழிந்திருப்பினும், அத்தீர்மானத்தின் கோரிக்கைகள ஈராண்டுக் காலத்தில் நிறைவேற்ற உறுதியளித்திருப்பினும், பன்னாட்டு நீதிபதிகளும் வழக்குத் தொடுநர்களும் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்ட அத்தீர்மானத்தின் முதன்மைக் கூறுகளைச் செயலாக்க மாட்டோம் என்று சிறிலங்காவின் குடியரசுத்தலைவரும் தலைமையமைச்சருமே திரும்பத் திரும்ப திட்டவட்டமாகப் பொதுவெளியில் கூறியுள்ளனர்.

அண்மையில், போர்க்குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் புரிந்ததாக ஐயத்திற்குரியவரென ஐநா பெயர்சொல்லிக் குறிப்பிட்டுள்ள முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தின் தலைமை அதிகாரியாக அமர்த்தப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலையங்கள் (போர் தவிர்ப்பு வலையங்கள்) என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் இந்தத் தளபதியின் கட்டளைத் தலைமையில்தான் குண்டுவீச்சும் எறிகணை வீச்சும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எலும்புக்கூடுகள் உட்பட சேகரித்த சான்றினைப் பத்திரமாக வைத்துகொள்ளச் சொல்லி சிறிலங்கா அரசாங்கத்திடமே விட்டுவைக்க அனுமதிப்பதும், அரசாங்கம் சான்றுகளை சிதைக்காமலோ அழிக்காமலோ வைத்திருக்கும் என்று எதிர்பார்ப்பதும் மிக மிக ஆபத்தானது. ஏராளமானோரைக் காணாமற்செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு தரப்பு சான்றுகளைப் பாதுகாத்து நீதி வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கோழிக் கூண்டுக்கு நரியைக் காவல் வைப்பது போன்றதே இது.

தமிழ்ப் பகுதிகளில் இதற்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டப் புதைகுழிகளுக்கு யாரும் பொறுப்புக்கூறுமாறு செய்யப்படவில்லை. எலும்புக்கூடுகள் உள்ளிட்ட சான்றுகளைப் பகுத்தாய்ந்து, அழியாமற்காக்கவும் இல்லை. இரு எடுத்துக்காட்டுகள் தரலாம்: 1998ஆம் ஆண்டு வடக்கு மாகாண நகரமான செம்மணியிலும், 2014ஆம் ஆண்டு கிழக்கு மாகாண நகரமான களுவாஞ்சிக்குடியிலும் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டப் புதைகுழிகள் இப்படித்தான் ஆயின.

வடக்கு மாகாணம் மண்டைத்தீவு எனுமிடத்தில் மற்றொரு கூட்டப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டடிருப்பதாக அண்மையில் செய்திகள் வந்துள்ளன. ஆண்டுக் கணக்கில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயிருப்பதை வைத்துப் பார்த்தால், தமிழ்ப் பகுதிகளில் மேலும் பல கூட்டப் புதைகுழிகள் இருக்குமோ என்ற கவலைகள் உள்ளன.

எலும்புக்கூடுகள் உட்பட சேகரிக்கப்படும் சான்றுகள் அனைத்தையும், புதைகுழி இடம்பெற்ற பகுதியையும் எதிர்காலப் பன்னாட்டு வழக்குத் தொடுப்புக்குச் சான்றாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துப் பகுத்தாய்ந்து, அழியாமற்காத்திட ஆவண செய்யுங்கள்.

நீங்கள் ஈடுபாடு கொள்ளா விட்டால், இந்தச் சான்றுகளையும் எலும்புக்கூடுகளையும் முந்தைய புதைகுழிகளில் செய்தது போல் சிதைத்தோ அழித்தோ விடுவார்கள் என்று கவலைப்படுகிறோம். மேலும், எலும்புக் கூடுகளைத் தோண்டியெடுத்துப் பகுத்தாயும் செயல்வழியையும், நீதிச் செயல்வழி உட்பட இதனோடு தொடர்புள்ள அனைத்துச் செயற்பாடுகளையும் நெருங்கிக் கண்காணிக்க ஒரு நோக்கரை அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன் என அக்கோரிக்கையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Suthan Raj
சுதன்ராஜ்
33-755-168-341
email us here

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.