There were 1,838 press releases posted in the last 24 hours and 399,123 in the last 365 days.

மக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன்

Visuvanathan Rudrakumaran

மலர்ந்துள்ள 2019ம் ஆண்டில் ஈழத்தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுதத வேண்டும்

2019 ஆம் ஆண்டில் தாயக மக்கள் அரசியல் முடிவொன்றை எடுப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிராமல், நேரடி ஜனநாயகப்போராட்டங்களில் ஈடுபட வேண்டும்”
— பிரதமர் வி.உருத்திரகுமாரன்
NEW YORK, UNITED STATES OF AMERICA, January 2, 2019 /EINPresswire.com/ --

கடந்து சென்ற 2018 மக்கள் போராட்டங்களின் வலிமையினை உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக கடந்த 2008 அமைந்திருந்த நிலையில், ஈழத்தமிழர் தேசத்திடம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எதிர்பார்க்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டம் உணர்த்தி நிற்கிறது என அவர் குறித்துரைத்துள்ளார்.

இந்நிலையில், மலர்ந்துள்ள 2019ம் ஆண்டில் ஈழத்தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுதத வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அதனது புத்தாண்டுச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார்.

பிதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தி:

ஈழத் தமிழர் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், உலகெங்கும் தமது உரிமைகட்காகப் போராடும்; அனைத்து மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நிறைவடைகிறேன். மலரும் இவ் 2019 ஆம் ஆண்டில் உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதில் முன்னோக்கிய காலடிகளை வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் இப் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக!

கடந்து சென்ற 2018ம் ஆண்டு உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக அமைந்திருந்தது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தி;ன் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் அமையும் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப் போராட்டம் உணர்த்தி நிற்கிறது.

இலங்கைத்தீவைப் பொறுத்தவரை ஒரு அரசின் மூன்று முக்கிய தூண்களான நாடாளுமன்றம், நிறைவேற்று அரசாங்க நிர்வாகம், நீதித்துறை மூன்றும் முட்டி மோதிக் கொண்ட காட்சிகளை நாம் 2018 இல் கண்டோம். நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் தறித்துக் குறைக்கப்பட்டிருந்த நிலையில் சிறிலங்கா ஜனாதிபதி ஆடிய அரசியல் ஆட்டங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் இவ் அரசியல் மோதல்கள் உண்மையில் கனதியான அனைத்துலகத் தலையீட்டால், குறிப்பாக அமெரிக்கத் தலையீட்டால்தான், முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகப் பலராலும் கணிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிமாறாமல் தடுக்கப்பட்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு, நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் மாறான தீரப்பை வழங்கினால் அதன் விளைவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனைத்துலக அரங்கில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் உட்பட பல்வேறு வகையான அனைத்துலகத் தலையீடுகள் இவ் விடயத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது. தீவிர சிங்களத் தேசியவாதிகள் இம் முரண்பாட்டை சிங்கள தேசத்துக்கும் அந்நிய கைப்பாவைகளுக்குமிடையிலான முரண்பாடாகவே சித்தரிக்கின்றனர். சிங்கள தேசத்தை இவ் விடயத்தில் அந்நிய கைப்பாவைகள் வெற்றி கொண்டதாக அவர்கள் மத்தியில் ஒரு கொதிப்பு இருக்கிறது. சிங்கள தேசத்தின் இத் தோல்விக்குத் தமிழ், முஸ்லீம் மக்களும், அமெரிக்க, இந்திய அரசுகளுமே காரணம் என அவர்கள் நம்புகிறார்கள். இதனால் மலரும் 2019 ஆம் ஆண்டில் சிங்கத் தேசியவாதிகளின் தீவிரமான செயற்பாட்டை இலங்கைத்தீவு எதிர்கொள்ள வேண்டி வரலாம். இதனைத் தமிழ் மக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

2019 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பத்தாண்டு நினைவைப் பதிவு செய்யப் போகிறது. நூறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்டு, பெரும் தமிழின அழிப்பு நடைபெற்று 10 வருடங்கள் நிறைவுறும் தருணத்திலும்கூட இனஅழிப்புக்குக் காரணமானவர்கள் ஒருவர் கூடத் தண்டனைக்குள்ளாக்கப்படவில்லை. தமிழின அழிப்பைத் திட்டமிட்ட வகையில் புரிந்த சிறிலங்கா அரசும் இதுவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவில்லை. இவ் விடயத்தில் சிறிலங்கா அரசைப் பாதுகாப்பதில் சிங்கள தேசியவாதிகள் மட்டுமல்ல, அனைத்துலக அரசுகளும் சிறிலங்கா அரசின் பக்கம்தான் நிற்கின்றன என்பதே உண்மை. இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதா, அல்லது சிறிலங்கா அரசின் ஊடாகத் தாம் அடைந்து கொள்ள வேண்டிய நலன்களை உறுதிப்படுத்துவதா என்பதில் தமது நலன்களின் பக்கம்தான் அரசுகள் நிற்கின்றன. இப்போது இந்த அரசுகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் சில கண்துடைப்பு நடவடிக்கைகளே தவிர நீதியை நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகள் அல்ல.

கொலைக்குற்றவாளியே தன்மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றச்சாட்டை விசாரிக்கும் நீதிபதியாக நியமிக்கப்படுவதைப் போல சிறிலங்காவின் போர்க்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை சிறிலங்கா அரசிடம் அனைத்துலக அரசுகள் வழங்கின. இவ் விடயத்தில் எதுவும் நடைபெறவில்லை என்பது அம்பலமாகியுள்ள இத் தருணத்தில், தமது நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கி நீதியின்பாற்பட்டுச் செயற்படும் மிகவும் உன்னதமான நீதித்துறை என்ற பட்டுக்குஞ்சத்தை இப்போது சிறிலங்காவின் நீதித்துறையின்மீது கட்டுகிறார்கள். சிறிலங்கா உச்சமன்றம் ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பானது யுத்தக்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்றினை நியாயப்படுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டின்போது பயன்படுத்தப்படப்போகிறது. இவ் விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை மூடிமறைக்க சிங்களத் தேசியவாதிகள் அனைத்துலக அரசுகளின் உதவியுடன் மேற்கொள்ளும் பகீரத முயற்சியினை எதிர்த்து உண்மையை நிலைநிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட தமிழ் மக்களின் அமைப்புகள் நீதியின் பாற்பாட்டு இயங்கும் அனைத்துலக சிவில் சமூக அமைப்புகளின் உதவியுடன் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றன. தமிழின அழிப்பை மூடிமறைக்க முயலும் முயற்சியை முறியடித்து தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை உயிர்ப்பாக வைத்திருப்பதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக அரங்கில் நீதிகோரும் போராட்டம் காலநீட்சி கொண்டது என்பதனால் இக் காலநீட்சியில் எமது போராட்டம் நீர்த்துப் போகாமற் பாதுகாப்பதில்தான் இவ் விடயம் தொடர்பான எமது வெற்றி தங்கியுள்ளது. இப் புரிதலுடன் நாம் அனைத்துலக அரங்கில் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை 2019 ஆம் ஆண்டிலும்; உறுதியாக முன்னெடுக்க வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கங்கள் எவையாக இருந்தாலும் தமிழின அழிப்பையோ, அல்லது தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதனையோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதனால் தமிழ் மக்கள் சிங்கள அரசாங்கங்களின் நிலைப்பாட்டை எதிர்த்து தொடர்ச்சியாக விட்டுக் கொடுப்பற்ற போராட்டத்தை நடாத்துவது தவிர்க்க முடியாத வரலாற்று நிரப்பந்தமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இப் போராட்டம் அரசியல் இராஜதந்திர வழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது. இந் நிலையில், தாயகத்தில் தமிழர் தலைமை வௌ;வேறு காரணங்களைக்கூறி சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பது தமிழ் மக்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும். அவர்கள் கடந்த தேர்தலின்போது தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுவது குறித்தும் எவ்வித அக்கறையும் இல்லாத நிலையே தெரிகிறது.

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் தாயக மக்கள் தீரக்கமான அரசியல் முடிவொன்றை எடுப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களாவும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் தலைவர்களை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிராமல் நேரடி ஜனநாயகப்போராட்டங்களில்; அணியணியாக இறங்குவதன் மூலம் நாம் ஏற்படுத்தக் கூடிய அரசியற்தாக்கம் குறித்தும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்;. அரபு வசந்தம் போலவோ அல்லது பிரான்சின் மஞ்சள் அங்கிப் போராட்டம் போலவோ தாக்கமுள்ள அரசியல் ஜனநாயகவழி நேரடிப் போராட்டங்களைத் தமிழ் மக்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் போது அவர்களை ஆதரித்து புலம் பெயர் மக்களும் போராட்டத்தில் குதிப்பார்கள். தமிழ் நாட்டிலும், உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்களை ஆதரித்துப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இக் கூட்டுப் போராட்டச் செயற்பாடு எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோக்கிய காலடிகளை எடுத்து வைப்பதற்கு உறுதுணையாக அமையும் என நான் நம்புகிறேன்.

இந் நேரடி ஜனநாயகப் (direct action) போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது: ஈழத் தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுத்தட்டும். இதுவே 2019 ஆம் ஆண்டு மலர்ந்துள்ள இத் தருணத்தில் நான் விடுக்கும் முதன்மைச் செய்தியாகும் என பிதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter: @TGTE_PMO

Contact: r.thave@tgte.org


நாதம் ஊடகசேவை

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Google+