There were 234 press releases posted in the last 24 hours and 166,480 in the last 365 days.

பிரித்தானிய நாடாளுமன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்திய நிகழ்ச்சியான ‘இனவழிப்பு ஒப்பந்தம் 70 ஆண்டுகளின்பின்’

LONDON, UK, December 31, 2018 /EINPresswire.com/ --

இனவழிப்புக் குற்றத்தைத் தடுப்பதும் தண்டிப்பதும் பற்றிய ஒப்பந்தத்தின் 70ஆம் ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திசம்பர் 10ஆம் நாள் இலண்டனில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருமைக்குரிய பேச்சாளர்களையும் விருந்தினர்களையும் ஒன்றுகூட்டிய நிகழ்வில்; இனவழிப்பு ஒப்பந்தத்தின் நோக்கத்துக்கும் செயற்பாட்டுக்குமான இடைவெளியைக் கடப்பது எப்படி, அதிலும் குறிப்பாகப் பொறுப்புக்கூறல் என்று வரும் போது இந்த இடைவெளியைக் கடப்பது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

‘இனவழிப்பு ஒப்பந்தம் 70 ஆண்டுகளின்பின் - தடுக்கவும் தண்டிக்கவுமான உறுதிமொழியைக் கண்டுகொள்ளாத இடத்தில்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம், பத்தாண்டு முன்னர் நடந்த ஆயுதப் போரின் இறுதிக் கட்டங்களில் சிறிலங்கா தமிழர் இனவழிப்புக்கு பன்னாட்டுச் சமுதாயம் சிறிலங்காவைப் பொறுப்புக்கூறும்படி செய்திட எடுக்கக்கூடிய செயல்சார் நடவடிக்கைகளையும் விரிவாக எடுத்தியம்பிற்று.

“தடுப்பதும் தண்டிப்பதும் ஒன்றையொன்று சார்ந்திருப்பன என்ற கருத்துக்கு அழுத்தம் தர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருப்பொருளைத் தெரிந்தெடுத்தோம். குற்றங்கள் தண்டிக்கப்படாமற்போவதே கொடுமைகள் விளைய வளநிலமாகிப் போகிறது, இனவழிப்பு ஒப்பந்தம் பிறந்த கதையே இதற்குத்தான் சான்றாய் உள்ளது” என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் இந்நிகழ்வில் காயலை (Skype) வழி உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் உரையாற்றிய மற்றவர்கள் விரிவான பல பங்காளர்களின் நிலைப்பாடுகளையும் குறித்து நின்றனர். அவர்களில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சியொபான் மக்டொனா, கரெத் தொமஸ், புகழ்மிகு மனிதவுரிமைச் சட்டவாளர்கள் பீட்டர் ஹெய்ன்ஸ்-கியூசி (QC), ரிச்சார்டு ரோஜர்ஸ், அலெக்ஸ் பிரெசான்ரி, கிம் ரென்ப்ரூ, இனவழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான பன்னாட்டு மைய (ICPPG) இயக்குநர்களில் ஒருவரான அம்பிகை சீவரட்ணம், தமிழ் இளையோர் அமைப்பைச் (TYO) சேர்ந்த சபாபதி கிருஷாந்த் ஆகியோரும் அடங்குவர்.

இனவழிப்புக்கான இரண்டாம் பன்னாட்டுத் தீர்ப்பை வரைய உதவிய ரிச்சார்டு ரோஜர்ஸ் அவர்கள் உரையாற்றுகையில், இனவழிப்பு ஒப்பந்தமானது இனவழிப்பு நடந்துவரும் ஒன்றாக இருப்பதையும் அதன் குறிப்பான தனித்தன்மையையும் உலகறியச் செய்வதிலும், இவ்வகைக் குற்றங்கள் குறித்து அருவருப்பு (stigma) உண்டாக்குவதிலும் பெரிதும் வெற்றி பெற்றுள்ளது என்றார். இருந்தபோதும் இவ் ஒப்பந்தம் இனவழிப்பைத் தடுப்பதில் அவ்வளவாகப் பயன்படவில்லை என்றும் கூறினார். மேலும், நமக்கு உண்மையில் தேவைப்படுவது என்ன? இனவழிப்பின் தொடக்க அறிகுறிகள் தென்படும் போதே விரைந்து செயல்பட அரசுகள் மேலும் உறுதிகாட்ட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். லெம்கின் அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் என்றால், மேலும் இனவழிப்புகள் நிகழாமல் தடுக்க வேண்டுமென்றால், வலிமைமிக்க அரசுகள் தன்னலத்தை ஒதுக்கி வைத்து விட்டு, குற்றங்களுக்கெல்லம் குற்றமான இனவழிப்பைத் தடுக்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார் ரோஜர்ஸ்.

உக்ரைனிலும் கம்போடியாவிலும் ஜார்ஜியாவிலும் பன்னாட்டுக் குற்றங்களால் பாதிப்புற்றோரின் சார்பாளரும், இப்போது கிமர் ரூஜ் தீர்ப்பாயத்தில் இனவழிப்புக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரின் சார்பாளரும் ஆகிய அலெக்ஸ் பிரெசான்ரி பேசுகையில் சொன்னார்: “கிமர் ரூஜ் தீர்ப்பாயத்திலிருந்து சிறிலங்காவில் பாதிப்புற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டிய நேர்நிறையான பாடம் ஒன்று உண்டு. ஆண்டுகள் கழித்தேனும் நீதி கிட்டலாம் என்பதே அது.” மேலும், பன்னாட்டுக் குற்றங்களுக்கான சான்றினை உறுதியாக ஆவணப்படுத்திப் பாதுகாத்தல் இன்றியமையாத் தேவை, இது தொடரந்து நடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

லெபனானுக்கான சிறப்புத் தீர்ப்பாயத்தில் பாதிப்புற்றோருக்கான முன்னணி சட்டச் சார்பாளரான பீட்டர் ஹெய்ன்ஸ் பேசுகையில், 1948க்குப் பின் பன்னாட்டுக் குற்றவியல் மற்றும் மனிதநேயச் சட்டம் (ICHL) என்பது காத்திரமான ஒன்றாகி விட்டது என்றார். ஆனால் குற்றங்கள் தண்டிக்கப்படாமற்போகும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடைமுறை இன்னமும் சாத்தியமாகவில்லை என்றார். சிக்கல் என்னவென்றால், பன்னாட்டுக் குற்றவியல் மற்றும் மனித நேயச் சட்டத்தின் சட்டங்களில் மக்களின் எதிர்பார்ப்புகள் மிகப் பெரியனவாய் உள்ளன என்றார்; இனப்படுகொலை விசாரணை செய்யும் அரசியல் (political will) மனத்திட்பம்தான் அவசியமாகும் என்றார். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுப்பர்களும், கனடாவிலும் பிரான்சிலும் உள்நாட்டு வழக்குத் தொடுப்பர்களும் செய்துள்ள முயற்சிகளை எடுத்துக்காட்டினார். பன்னாட்டு நீதி என்பது தானாகவே ஒவ்வொன்றையும் சரிசெய்து விடாது என்றார். பாதிப்புற்றோர்க்கு நீதி கிடைக்கச் செய்வது பாராட்டத்தக்கது. ஆனால் நீதி என்பதன் பொருள் சிறைத்தண்டனைக்கும் மேலானது. பன்னாட்டுக் குற்றவியல் மற்றும் மனிதநேயச் சட்டம் இப்போதுதான் இழப்பீடுகள், பின்விளைவுத் தொடர்ச்சி போன்ற கருத்தாங்கங்களை கவனத்தில் எடுக்கத் தொடங்கியுள்ளது என்றார். இனவழிப்பு என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பது கடினம், அதேசமயம் ஒரு நாடு அந்த முத்திரையோடு வாழ்வதும் கடினம் என்று சொல்லி முடித்தார்.

இனவழிப்பைத் தண்டிப்பதற்கும் தடுப்பதற்குமான பன்னாட்டு மையத்தைச் சேர்ந்த அம்பிகை சீவரட்ணம் அவர்கள் பேசுகையில் இனவழிப்பினால் பாதிப்புற்றோரே சாட்சியமளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இனவழிப்புக் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கு மட்டுமல்லாமல், இனவழிப்பு எங்கே நடந்தாலும் பன்னாட்டுச் சமுதாயம் அதனை இனவழிப்பு என்றே அறிந்தேற்கச் செய்யும்; கடினமான பணிக்கும் கூட இந்த சாட்சியம் இன்றியமையாதது என்றார்.

சபாபதி கிருஷாந்த் பேசுகையில், புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் கண்ணோட்டம் குறித்து கருத்து வழங்கினார். நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான தமிழர் போராட்டம் குறித்துத் தன் தலைமுறையினர்க்கு தெளிவான புரிதல் இருப்பதாகச் சொன்னார். தானும் தன் வயதை ஒத்தவர்களும் தமிழர் போராட்டத்தை நீதிமன்றக் கூடங்களுக்குள் அடங்கிய ஒன்றாகப் பார்க்கவில்லை என்றார். தமிழ் மக்களின் வரலாற்றுக் கதையாடலையும், தற்சார்பான, இறைமைகொண்ட தேசமாகத் தமிழீழத்தின் வரலாறு பற்றிய உண்மையையும் பாதுகாப்பதற்கான விரிந்தகன்ற பெருமுயற்சியாகவே பார்க்கிறோம் என்றார்.

“தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்தின்; பரிமாணத்தையும் (magnitude) கொடுமையையும் உணர்த்த இனவழிப்பு என்பதைத் தவிர வேறு சொல் இருக்க முடியாது. முள்ளிவாய்க்கால் பெருங்கொடுமையை இனவழிப்பு என்று அறிந்தேற்காமைக்கான அரசியல் காரணம் என்னவென்றால், ஆபிரிக்க மனிதவுரிமைத் தீர்ப்பாயங்களும் கியுபெக் தொடர்பாக கனடா உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ள கருத்துகள் காட்டியுள்ளபடி, மரபுவழிவந்த நீதிநெறிமுறையின் அடியொற்றி, இனவழிப்புக்குள்ளாக்கப்பட்ட ஓரு இனம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் ஒரு தனிநாடு அமைத்துக் கொள்ளும் உரிமையுடையது என்பதே. நிலைமாற்ற நீதிநெறிமுறையும் கூட இழப்பீடுகளையும் மீள்நிகழாமையையும் தன் நான்காம் தூணாகக் கொண்டிருப்பதால், தனிநாடு அமைப்பதை நியாயபப்டுத்த முடியும் என்கிறது” என்று பிரதமர் உருத்திரகுமாரன் கூறினார். “இப்போது தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியல் ஏற்பாட்டை வகுப்பதை விடவும் சிறிலங்காவை ஒரு நாடாக வைத்துக்கொள்ளவே பல அரசுகள் விரும்புகின்றன. அதன் காரணமாகவே முள்ளிவாய்க்காலில் நடந்ததை இனப்படுகொலை என ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றன” என்றும் அவர் கூறினார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் உலக அரசுகளுக்கு ஒரு செயலழைப்பையும் விடுத்தார்:

“சிறிலங்கா தொடர்பாக இனவழிப்பு ஒப்பந்தத்துக்குப் பொருட்செறிவூட்ட (to give meaning ), அவ்வொப்பந்தத்தில் ஒப்பமிட்ட அரசுகளில் ஒன்று பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICJ) சிறிலங்காவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்க அழைக்கிறோம். சிறிலங்கா தொடர்பாகவும் சரி, வேறுபல சந்தர்ப்பங்களிலும் சரி, வழக்கமாக வெறும் தனியாட்கள் அல்ல, முழு அரசு எந்திரமுமே இந்தக் கொடுங்குற்றத்தை இழைக்கக் காண்கிறோம். அதாவது அரசுகளே இக்குற்றம் புரிகின்றன.” இவ்வாறு கூறிய உருத்திரகுமாரன் மேலும் சொன்னார்: “அரசுகள் தமது அயல் இறைமைக் குற்றவிலக்குரிமைச் சட்டத்தைத் திருத்தி இன அழிப்பு குற்றம் தொடர்பாக அரசுகளுக்கான குற்றவிலக்குரிமையை அகற்றும்படியும், தங்கள் உள்நாட்டுத் தீர்ப்பாயங்களில் இனவழிப்புக் குற்றத்துக்காக அரசுகளை எதிர்த்துச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும்படியும் அரசுகளை வேண்டுகிறோம்.”

இந்நிகழ்ச்சி “சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றப் பார்வைக்கு அனுப்புக” என்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்தி வரும் கையொப்ப இயக்கத்தின் வெற்றியையும் வெளிச்சமிட்டுக் காட்டிற்று. இந்த இயக்கம் நாளது வரை கிட்டத்தட்ட இருபது இலட்சம் கையொப்பங்களைத் திரட்டியுள்ளது. ஆதரவு திரட்டும் பணி செய்து வரும் செயல்வீரர்களுக்கு இந்நிகழ்வில் அறிந்தேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மனிதவுரிமை மற்றும் பெருந்திரள் கொடுமைகள், இன அழிப்புக்கெதிரான அமைச்சராயிருக்கும் திரு பத்மனாதன் மணிவண்ணன் நன்றிநவில மாலைப்பொழுது இனிதே நிறைவுற்றது.

“சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றப் பார்வைக்கு அனுப்புக” என்பதற்கான கையொப்ப இயக்கத்தில் பெயர் கொடுங்கள். http://www.tgte-icc.org/


Twitter: @TGTE_PMO

Contact: r.thave@tgte.org

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Google+


EIN Presswire does not exercise editorial control over third-party content provided, uploaded, published, or distributed by users of EIN Presswire. We are a distributor, not a publisher, of 3rd party content. Such content may contain the views, opinions, statements, offers, and other material of the respective users, suppliers, participants, or authors.