There were 1,835 press releases posted in the last 24 hours and 399,972 in the last 365 days.

2019ல் ஈழத்தமிழர்களின் நீதிக்கும் இறைமைக்குமான செயல்வழிப்பாதை எது ? - சுதன்ராஜ்

PARIS, FRANCE, December 31, 2018 /EINPresswire.com/ --

நீதிக்கும் இறைமைக்குமான ஆண்டாக 2019, ஈழத்தமிழர்களுக்கு மலருமா என்ற எதிர்பார்ப்போடு 2018க்கு விடைகொடுக்கின்றது.

உலகம் புத்தாண்டை வரவேற்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. படிப்பினைகளையும், நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புக்களையும், ஏமாற்றங்களையும் அவரவர் கோணத்தில், ஒவ்வொருவருக்கும் 2018 விட்டுச் செல்கின்றது.

அவ்வகையில் ஈழத்தமிழர்களுக்கு 2018 விட்டுச்சென்றது என்ன ?

இதுதான் இன்றைய கேள்வி.

ஈழத்தமிழர் தேசம் தனது அரசியல் நிகழ்ச்சிநிரலை தானே தீர்மானிக்கும் வகையில் வியூகம் அமைத்து செயற்படுவதோடு, சிறிலங்கா ஆட்சியாளர்களதும், அனைத்துலக அரசுகளதும் நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் அரங்கை எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதொரு காலகட்டத்தில் ஈழத்தமிழர் அரசியல் இருந்தது என்பதுதான் என்பதுதான் 2018ன் நிலையாக இருந்தது.

ஆனால் நடந்தது என்னவோ இதற்கு மாறானதாகவே காணப்படுகின்றது.

இந்தோ-பசுபிக் மூலோபாய பரப்பில், இலங்கைத்தீவின் முக்கியத்துவம் மீண்டும் உணர்த்தப்பட்டிருந்ததோடு, இத்தீவில்(இலங்கை) வாழும் தமிழர்கள், இம்மூலோபாயத்தில் முக்கிய சக்திகளாக உள்ளனர் என்பதனையும் 2018 மீண்டும் உணர்த்தியிருந்தது.

இங்கே, 'உணர்த்தியது' என்பதானது, அதன் பூகோள அரசியல் பரிமாணத்தில் அன்றி, அது தமிழர் அரசியல் தரப்பின் (த.தே.கூ) கோணத்தில் அல்ல என்பதனையும் நாம் உணரவேண்டியுள்ளது.

தென்னிலங்கை அரசியற்களத்தில் அரங்கேறிய 'அந்த 52 நாட்கள்' அரசியல் நாடகம் என்பதானது, சிங்கள அரசியற்தரப்பின் 'இனநாயக' பண்புகளை வெளிச்சம் போட்டுகாட்டியிருந்ததோடு, அந்நாடகத்தில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் 'எடுப்பார் கைப்பிள்ளை' பாத்திரத்தினையும் வெளிச்சம் போட்டுகாட்டியிருந்தது.

அதாவது தென்னிலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியற் சதுரங்கத்தை ஈழத்தமிழர் அரசியல் நோக்கு நிலையில் இருந்து அணுகாமல், அவ்விவகாரத்துக்குள் தன்னையும் ஒரு தரப்பாக உள்நுழைத்ததானது, அதன் நிகழ்ச்சி நிரல் யாருக்கானது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

'அந்த 52 நாட்கள்' நாடகம், அரங்கில் இருந்து அகற்றப்பட்டு விட்டாலும், 2018ன் முக்கிய அரசியல் நாடகம் என்ற வகையில், தமிழர் தரப்பு இந்த நாடகத்தில் எத்தகைய பாத்திரத்தினை ஏற்றிருந்தார்கள், எவ்வாறு இயங்கினார்கள், எவ்வாறு இயக்கப்பட்டார்கள் போன்ற விடயங்கள் முக்கியமானதாக இருக்கின்றது.

ஈழத்தமிழர்களின் நீதிக்கும், இறைமைக்குமான செயல்வழிப்பாதையில் அவைகள் காத்திரமான தாக்கத்தினை 2019ல் செலுத்தப் போகின்றது.

அவ்வகையில் இந்த நாடகமானது வெறுமன சிங்கள ஆட்சியாளர்களுக்கு இடையிலான ஒரு கதிரைப் போட்டியாக மட்டும் காணப்படவில்லை. இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின் முக்கிய வல்லாதிக்க சக்திகளின் ஒரு போட்டியாகவே பின்னாட்களில் காணப்பட்டிருந்தது.

தமது நலன்களுக்கு அமைய, இலங்கைத்தீவில் அமைத்துக் கொண்ட 'நல்லாட்சி' நாடகத்தின் பாத்திரங்களில், சடுதியாக ஏற்பட்ட மாற்றங்கள் இச்சக்திகளை நெருக்கடிக்குள் தள்ளியிருந்தது. எப்பாடுபட்டேனும் சிறிலங்காவின் ' ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும்' காப்பாற்றிவிடுவதானது, தமது நலன்களை காப்பாற்றவதானதற்கு சமமானது என்ற நிலையில், இச்சக்திகளுக்கு தமிழர்களின் வகிபாகம அவசியாமான காணப்பட்டிருந்தது.

இவ்விடத்தில் தமிழர் தரப்பு, தனது நலன்களுக்கு அல்லது தனது மூலோபாயங்களுக்கு அமைய எத்தகைய தந்திரோபாய அரசியலைக் இசக்திகளோடு கையாண்டது என்பதுதான் அடிப்படைக் கேள்வி.

இந்த பலமிக்க சக்திகளின் நலன்களுக்கு அமையவே, 2015ம் ஆட்சிமாற்றத்திற் தமிழர்களின் வாக்குகள், முக்கிய பேரமாக அமைந்திருந்த நிலையில், எந்த பேரங்களுமன்றி தமிழர்களின் வாக்குகளை அள்ளிக்கொடுத்த ஒரு நிலைதான் காணப்பட்டிருந்தது.

அள்ளிக்கொடுத்த வாக்குகளை எல்லாம் பத்திரமாக ஏந்திக்கொண்ட இச்சக்திகள், கடந்த 2017ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில், சிறிலங்கா அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசத்தினை வழங்கியது என்பது அதன் அரசியற் நிகழ்சி நிரலைக் காட்டியிருந்தது.

வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகால அவகாசம் முடிவதற்கு 4 மாதங்களே இருந்த நிலையில்தான், தென்னிலங்கையில் இந்த 'அந்த 52 நாட்கள்' அரசியற்களம் அரங்கேறியிருந்தது.

சிறிலங்கா அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவன் ஊடாகவே, தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஈடுசெய் நீதி கிடைக்கும் என்ற நிலையில், ஈழத்தமிழர்கள் காத்திருந்த நிலையில், ஒரு கலப்பு நீதிமன்றத்துக்கான பரிந்துரையுடன் ஐ.நா.வின் காலநீடிப்பு தீர்மானம் அமைந்திருந்தது.

பொறுப்புக்கூறலுக்கான எந்தவிடயத்திலும் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் எந்த முன்னேற்றத்தையும் காட்டாத நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே ஒரே வழியென்ற நிலைப்பாட்டை தமிழர்கள் வலியுறுத்தத் தொடங்கியிருந்தனர்.

எதிர்வரும் மார்ச் 2019, ஐ.நா கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பான அடுக்க கட்டம் என்ன என்ற நிலையில், ஈழத்தமிழர்களின் நீதிக்கான வேட்கைக்கு தென்னிலங்கையின் அரசியற் சதுரங்கத்தை எவ்வாறு த.தே.கூ கையாண்டது என்பதே இங்கு தொக்கி நிற்கும் கேள்வி.

எந்தவித உத்தரவாதங்களுமின்றி 2015ல் தமிழர்களின் வாக்குகளை வாரிச்சுரிட்டிக் கொடுத்தவர்கள், இன்று தமது வாக்குகளை கொடுத்துள்ளார்கள்.

எந்த வாக்கை நம்பி ?

தமது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்கு என்ன ? ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்கின் நிலை என்ன ?

சிறிலங்காவின் நீதிமன்றப் பொறிமுறை என்பது இனநாயக பண்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்ற நிலையில்தான், சர்வதேச நீதிமன்றத்தின் வாயில்களை நோக்கி தமிழர்களின் நீதிக்கான கோரிக்கை அமைந்திருந்தது.

ஆனால இனநாயகப் பண்புநிறைந்த சிறிலங்காவின் நீதிகட்டமைப்பின் வழியே, சிறிலங்காவின் ஜனநாயகத்தை மீட்டெடுத்த கனவான்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே இருந்துள்ளதுனர் என்பதுதான் நாடகத்தின் பிந்திய பரபரப்பு காட்சிகளாக காணப்பட்டிருந்தன. அதாவது கறுப்பு அங்கியுடன் சிறிலங்காவின் நீதித்துறைக்கு வெள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்த தொடரில் வெள்ளை அடிக்கப்பட்ட தனது நீதி தேவதையுடன் ஜெனீவா வரும் சிறிலங்கா, தனது கலப்பு நீதிமன்றமே இனித் தேவை இல்லை, தமது நீதிக்கட்டமைப்பே தமிழர்களுக்கான நீதியையும் வழங்கும் என வாதிடும் என்பது கடந்த கால ஜெனீவா அனுபவமாகவுள்ளது.

'அந்த 52 நாட்கள்' நாடகத்தின் ஊடாக இந்தோ-பசுபின் பூகோள அரசியற் மூலோபாயத்தில் இலங்கைத்தீவில் தமிழர்களின் அரசியல் வகிபாகம் குறித்தான முக்கியத்துவத்தினை மீண்டும் ஒரு தடவை வெளிகாட்டி நின்றாலும், தமிழர் அரசியற் தரப்பு அதனை கையாளத்தவறிவிட்டது என்பதே 2018ன் ஈழத்தமிழர் அரசியலின் ஒரு சறுக்கலாக காணலாம்.

இச்சறுக்கல் 2019 மார்சில் ஜெனீவாவில் எத்தகைய தாக்கத்தினை ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஏற்படுத்தும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டிய நிலையில், தமிழர்களின் இறைமைக்கான போராட்டத்தில் 2018 மாவீரர் நாளில் தமிழர் தேசம் வெளிகாட்டிய ஆத்மபலம் என்பது மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தமது உயிர்களை தியாகம் செய்தார்களோ, இந்த இலட்சிய நெருப்பை அணையவிடாது நெஞ்சினல் ஏந்தியவர்களாக அந்நாளில் மக்கள் காணப்பட்டிருந்தார்கள். புலம்பெயர் தேசம் முழுவதுமே இதுவாகவே காணப்பட்டிருந்தது.

தமது அரசியற் தலைவிதியியை தாமே தீர்மானிக்கும் உரிமையினை வலியுறுத்துகின்ற வகையில், தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியற்தீர்வும் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுதல் முக்கியமானது. இது தமிழர் தாயக மக்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டின்பாற்பட்ட அடிப்படையான உரிமையாகும். ஈழத்தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வும் இனப்படுகொலையிலிருந்த தமிழர் தேசத்தைப் பாதுகாக்கக்கூடியவகையில், தமிழ் மக்களுக்கான ஈடுசெய்நீதியின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு ஈடுசெய்நீதியின் அடிப்படையிலான அரசியற்தீர்வு அவசியம் என்பதனை வலியுறுத்துகிறது.

ஆனால் பிந்திய நிலைவரத்தின்படி, மீண்டும் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, ஒற்றையாட்சின் கீழ் தமிழ் மக்களுக்கு தீர்வும் என்றும், புதிய அரசியலமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் என்றும் தமக்கு வாக்குறுதி கொடுத்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

இறுக்கமான பௌத்த பேரினவாத சிங்கள கட்டமைப்பினால் தீர்மானிக்கப்;படும் அரசியல் ஏற்பாடுகளைத் தமிழர் தேசத்தின்மீது திணிக்கும் அரசியற் பொறிமுறையே சிறிலங்கா ஆட்சியாளர்களது ஒற்றை யாட்சி நிலைப்பாடு என்பது ஊர்அறிந்த உண்மை. இதனை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசிலமைப்பு இருக்கும் என்பது தெளிவானது. சிங்கள தேசத்தின் மேலாண்மையினை தமிழர்கள் ஏற்றுக் கொண்டதாக அரசியல்ரீதியில் அர்த்தப்படுத்தப்படும்.

ஆனால் இலங்கைத்தீவில் «இதுதான் யதார்த்தம்» என்று சிலர் யாதார்த்த அரசியல் வகுப்புக்கள் எடுக்கக்கூடும். அதாவது தமிழர் தேசம் சிங்கள தேசத்திடம் நிரந்தரமாக அடிமைப்பட்டுப்போகும் நிலையினை யாதார்த்தமாக விளக்குவார்கள்.

ஆனால் நிலைகள் அதுவல்ல என்பதனையே மாவீரர்நாளில் மக்கள் திரட்சியின் அரசியற்பரிமாணம் உணர்த்தியுள்ள நிலையில், 2019ல் தமிழர்களின் இறைமைக்கான அரசியற் போராட்டத்தில் தமிழர் தலைவிதி தமிழர் கையில் என்ற வகையில், பொதுவாக்கெடுப்புக்கான அரசியற் செயல்வழிப்பாதை நோக்கிய ஈழத்தமிழர் அரசியல் அமைய வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியற்தலைவிதியைத் தமிழ் மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான அரசியற்தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயற்திட்டத்தினை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.

இதுவொரு நீண்டதொரு செயற்திட்டமே. ஆனால் இதுதான் அரசியற்தீர்வுக்கான சிறந்ததொரு பொறிமுறையாக காணப்படுகின்ற நிலையில், சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சனைக்கு அரசியற்தீர்வினைத் தருமென்ற காத்திருப்பு அரசியலைக்கடந்து, தமிழர்கள் தமக்கான நிகழ்ச்சி நிரலை நோக்கி நகருகின்ற ஆண்டாக 2019 அமைய வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்பாகும்.

இதுவே ஈழத்தமிழர்களின் நீதிக்கும் இறைமைக்குமான அரசியற் செயல்வழிப்பாதையாக இருக்கும்.

Suthan Raj
Suthanraj
+33 7 55 16 83 41
email us here