There were 1,833 press releases posted in the last 24 hours and 399,155 in the last 365 days.

இலங்கையின் ஜனநாயகம் - இனநாயகம் : சுதன்ராஜ்

PARIS, FRANCE, November 5, 2018 /EINPresswire.com/ --

இலங்கையின் கெட்ட கனவென சிங்கள தேசத்தின் தற்போதைய அரசியல் நிலைவரத்தை வர்ணித்துள்ள பிரான்சின் பிரபல பத்திரிகையான லு மோன்த், 'மனித உரிமை மீறல்கள், காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள மற்றும் கொடூரவாதத்தின் குற்றச்சாட்டுகளை கொண்டிருக்கும் மகிந்த இராஜபக்ஷ மீண்டும் அரசியல் அரங்கிற்கு திரும்பியுள்ளார்' என தனது செய்திக் கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளது.

மேற்குலக நாட்டவர்களது நவீன கொண்டாட்டங்களில் ஒன்றாக 'கலோவின்' எனப்படும் பேய்கள் கொண்டாட்டம், இவ்வாரமே கடந்து சென்றுள்ள நிலையில்தான், இலங்கையின் கெட்ட கனவாக 'மகிந்த இராஜபக்சவை' ஒரு பூதமாக, மேற்குலக ஊடகங்கள் பலவும் செய்திக்கட்டுரைகளை வரைந்து தள்ளியுள்ளன.

ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல், இந்த மேற்குலக ஊடகங்கள் ஊடாக மகிந்த ராஜபக்சவை ஒரு பெரும் பூதமாக காட்ட முனைந்த 'நல்லாட்சி' அரசின் பங்காளி நாடுகளும், மணிக்கொரு தடவை செய்தியாக 'உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்' என்ற அறிக்கைகள் ஊடாக தமது பதற்றத்தை வெளிக்காட்டி வருகின்றன.

மறுபுறம், சடுதியாக சிங்கள தேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் களோபரம், புலம்பெயர் தமிழர்கள் பலரையும் பதற்றத்துக்குள் தள்ளியுள்ளது. நிமிடத்துக்கு நிமிடம் கைபேசியில் நாட்டு நடப்பை புலம்பெயர் தமிழர்கள் பலரும் பதற்றத்தோடு 'உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்' எனலாம்.

ஏன் இந்தப் பதற்றம்?

உண்மையில் பெரும்பாலானவர்களது கவலை என்பது மகிந்த ராஜபக்ச திரும்பி வந்தால், ஊர் சென்று முடியுமா என்பதுதான். பெரும்பாலானவர்களிடத்தில், இதன் அக-புற அரசியலுக்கு அப்பால், இவர்களது அக்கறை என்பது 'வக்கேசனுக்கு' ஊருக்கு போய் வரமுடியாதா என்பது மட்டுமல்ல, ஊரில் கட்டத் தொடங்கியுள்ள வீடு வாசல், கோவில் குளம் என்று குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே அடங்குகின்றது.

இதற்கு காரணம், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தினை விட,அதன் ஒப்பீட்டளவில் மைத்திரி-ரணில் அரசாங்கம் வழங்கிய வெளி என்பது, புலம்பெயர் தமிழர்களுக்கு பல வாய்ப்புக்களை வழங்கியிருந்தது.

அப்படியாயின் உண்மையில் மகிந்த ராஜபக்ச ஒரு பூதமா ?

ரணில் - மைத்திரி - சந்திரிகா - சரத்பொன்சேகா தரப்பினர் புனிதர்களா ?

2015ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவை ஒரு பூதமாக காட்டியே, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது மைத்திரி-ரணில் 'நல்லாட்சி' அரசாங்கம் அமைக்க, தமிழ் மக்களது வாக்குகளை பெற்றுக் கொடுத்திருந்தது.

'மாற்றம் ஒன்று மட்டுமே உலகில் நிலையானது' என்ற முழக்கத்துடன், தமிழ் மக்களின் உண்மையை உலகறியச் செய்ய, அனைவரும் அலையாக அணிதிரண்டு, அன்னத்திற்கு வாக்களிப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சியின் நாயகராக திருவாளர் மைத்திரிக்கு வாக்கு சேகரித்திருந்தது.

ஆனால் இன்று, யாரை பூதமாக காட்டினார்களோ, அப்பூதத்தையே ஆட்சிக்கதிரையில் இருத்தி அழகுபார்க்க முனைந்திருக்கும் நல்லாட்சி நாயகர், அப்பூதத்தை விட தான் கொடிய பூதம் என்பதனை தனது கட்சிக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தடவை சூளுரைத்துள்ளார்.

அதாவது தன்னைக் கொன்றுவிட்டுத்தான் வடக்கையும் - கிழக்கையும் இணைக்கலாம் என்பதோடு, சமஸ்டி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை' என சூழுரைத்துள்ளார்.

இது அரசியல் சதுரங்கத்தில் வரும் தேர்தலில் சிங்கள வாக்காளர்களையும், முஸ்லீம் வாக்காளர்களையும் கவர்ந்திழுப்பதற்கான ஒரு உத்தியாக தென்பட்டாலும், சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களில் ஆழவேர்விட்டுள்ள பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாவே இது உள்ளது.

நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களுக்கும், போர் குற்றச்சாட்டுக்களுக்கும் பொறுப்புக்கூற தனது இராணுவத்தை எந்தாவொரு நீதிமன்றின் முன்னாலும் நிறுத்தப் போவதில்லை என சூழுரைத்து வந்திருந்த நல்லாசியின் நாயகரே தற்போது இதனையும் சூழுரைத்துள்ளார்.

இதனைத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் முன்னர் ஒருதடவை குறிப்பிட்டிருந்தார், தமிழர் தேசத்தின் மீதான் இராணுவ ஆக்கிரமிப்பு வெற்றியினை, மைத்திரி அரசியல் வெற்றியாக்க முனைகின்றார் என்று.

அவ்வாறெனில் உண்மையில் யார் பூதம் ?

சிங்கள தேசத்தில் தற்போது எழுந்துள்ள இந்த அரசியல் நெருக்கடி என்பது, மேற்குலகம் எதிர்பாராத ஒன்றாகவே வெளிநாட்டு ஊடகங்களின் பார்வையின் காண முடிவதோடு, இவ்விவகாரத்தில் சீனாவை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதனையும் செய்திகளில் அவதானிக்க முடிகின்றது.

'சீனாவின் பட்டுப்பாதையில் ஒரு பதற்றம்' என மற்றொரு பிரென்சு பத்திரிகையான லு குறுவா செய்தியிட்டுள்ளது.

பிரென்சு தேசத்தின் போர்வீரனான நெப்போலியன்,' சீனா உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூதம் ' என நூற்றாண்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தான். உண்மையில் மகிந்த ராஜபக்சவூடாக சீனப் பெரும் பூதத்தைதான் இந்த மேற்குலக அரசுகள் இலங்கைத்தீவில் காண்கின்றன. அதனைத்தான் தற்போதயை அவர்களது பதற்றமும் காண்பிக்கின்றது.

ஐ.நா மனித உரிமைச்சபையில் போர் குற்றச்சாட்டுக்கள் ஊடாக கடும் அழுத்தங்களை கொடுத்து, தமிழர்களின் வாக்குகள் ஊடாக தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசினை இலங்கைத்தீவில் இந்த மேற்குலகம் அமைத்துக் கொண்டது என்பது ஊர் அறிந்த உண்மை.

ஆனால் எதிர்பாராதவிதமாக இவர்களது நிகழ்ச்சி நிரலை, நல்லாட்சியின் நாயகரே குழப்பிவிட்டதுதான் தற்போது மேற்குலகிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. தொண்டையில் குத்திய முள்ளாக விழுங்கவும் முடியாமல் வெளியே எடுக்கவும் முடியாமல் திணறுகின்ற நிலை.

2005ம் ஆண்டு சிறிலங்காவின் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவை ஒரு யதாத்தவாதி என தனது மாவீரர் நாள் செய்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வர்ணித்திருந்தார். இதன் காரணமாக மேற்குலகின் விருப்பான ரணில் தோல்வியுற, மகிந்த ஆட்சிக்கு வந்தார். இதனை அன்றைய அமெரிக்காவின் நியூ யோர்க் ரைம்ஸ், ' மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை குழப்பிய ஒற்றை மனுசன்' என வே.பிரபாகரனை குறிப்பிட்டிருந்தது. விடுதலைப்புலிகள் மீதான மேற்குலகத்தின் கோபத்துக்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுவதுண்டு.

அவ்வாறானதொரு நிலைதான் மேற்குலகிற்கு மீண்டும் இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ளது. அதே மகிந்த ராஜபக்ச. அதே நிகழ்ச்சி நிரல்.

உள்ளுர் அரசியல் ஆட்டத்தில் காட்சிகள் மாறியிருந்தாலும், இதன் இறுதிக்காட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக பிராந்திய-வல்லாதிக்க சக்திகள் காணப்படுகின்றன.

தேர்தல்களை ஒழுங்காக நடாத்தி சட்டத்தின் ஆட்சி நடாத்துகின்ற ஒரு ஜனநாயக நாடு என்றே சிறிலங்காவை இந்த மேற்குலக நாடுகள் விழிப்பதுண்டு.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நாட்டின் நிலைவரம் என்பது, சிறிலங்காவின் ஜனநாயகம் என்ன என்பதனை இந்த உலகம் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, அங்கு ஜனநாயகம் அல்ல, இருப்பது இனநாயகமே என்பதனை புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்பினை தற்போதைய சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.

சிங்கள பௌத்த மேலாண்மை சிந்தனாவதத்தினை கொண்டுள்ள இனநாயகத்தில், சுதந்திரம், சமத்துவம், சகேதாரத்துவம், ஜனநாயகம் எல்லாம் வெற்றுப்பூச்சுத்தான் என்பதனை உலகம் உணருகின்ற நாட்களாகவே இவைகள் உள்ளன.

சிங்கள பௌத்த பேரினவாத பூதத்தின் பிரதிநிதிகளாக இனநாயகத்தின் ஆட்சியாளர்களாக, காலத்துக்கு காலம் புதுப்புது பூச்சுக்களுடன் வருபவர்களே இவர்கள். தற்போது 'நல்லாட்சி' எனும் பூச்சு கலைகின்ற நேரம். தமிழர்களுக்கு அனைத்துலக அரங்கில் புதிய வாய்புக்களுக்கான கதவுகளை திறக்கின்ற நேரம்.

Suthan Raj
Suthanraj
+33 7 55 16 83 41
email us here