There were 1,884 press releases posted in the last 24 hours and 400,016 in the last 365 days.

இலங்கைதீவில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் துயரத்தை ஐ.நா குழவின் பார்வைக்கு கொண்டு செல்வோம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Families of disappeared

காணாமற்போனோர் குடும்பங்கள்

"கொலைகளுக்கு யார் பொறுப்பு? அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? காணாமலாக்கப்பட்டவர்களின் உடலங்கள் எங்கே? எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை"

COLOMBO, SRI LANKA, August 29, 2018 /EINPresswire.com/ --

இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் துயரத்தை, வலிந்து காணாமற்போதல் தொடர்பான ஐ.நா குழுவின் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் கூறுகின்றது. 2009 போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களும், குடும்பம் குடும்பமாகச் தங்களை ஒப்படைத்த பலரும் காணாமற்போயுள்ளனர்.

தங்களுக்குத் தீங்கு நேராது என்ற சிறிலங்கா படையினரின் உறுதிமொழிகளை நம்பியே, தாமாக முன்வந்து படையினரிடம் தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்களும், தங்கள் உறவுகளை ஒப்படைத்துக் கொண்டவர்களும் அடங்கும்.

சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலகச் சட்டங்களின்படியும், ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் 30-1, 34-1 தீர்மானங்களின் படியும் கூட தனக்குள்ள கடப்பாடுகளையும் இதுவரை நிறைவேற்றத் தவறி விட்டது.

சிறிலங்காவே இத்தீர்மானங்களைபிற நாடுகளுடன் கூட்டாக முன்மொழிந்திருந்தது. இவற்றுக்கு முழு அளவில் செயல்வடிவம் கொடுப்போம் என்று ஐநா அமைப்புக்கு உறுதியும் கொடுத்திருந்தது. சிறிலங்கா அரசாங்கம் எத்தனையோ உறுதிகள் கொடுத்தும் கூட, தனது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட நீதியின் முன் சிறிலங்கா அரச தரப்பு நிறுத்தவில்லை.

2009 மே மாதம் போரின் முடிவில் இராணுவத்திடம் தங்களை ஒப்படைந்தவர்களின் பட்டியலை வெளியிட, பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் ஆணையிடுவேன் என்ற உறுதிமொழியை, சிறிலங்கா அரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேனா அவர்கள், தன்னைச் சந்தித்த காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், குடும்பத்தினரிடம் கூறியிருந்தார்.

ஆனால் கொடுத்த வாக்குறுதியை அரசுத் தலைவர் இதுவரை நிறைவேற்றவில்லை.

மேலும் '2009 மே மாதம் போர் முடிவில் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்தவர்கள் இப்போது உயிருடனில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் 2016 சனவரி 15ம் நாள் யாழ் பாணத்தில் இடம்பெற்றிருந்த பொங்கல் விழா பொதுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இது வரை தன் கூற்றுக்கு எவ்வித விளக்கமும் தர மறுத்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா வருகிறார்.

கொலைகளுக்கு யார் பொறுப்பு? அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? காணாமலாக்கப்பட்டவர்களின் உடலங்கள் எங்கே? எந்தக் கேள்விக்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.

அனைத்துலக சமூகத்தின் அழுத்தம் காரணமாக சிறிலங்கா அரசாங்கம் காணாமற்போனோர் அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தியது. இந்த அலுவலகம் கண்டறியும் செய்திகளை நீதி கோருவதற்காக உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகளில் பயன்படுத்த முடியாது என்று இந்தச் சட்டத்தின் பிரிவு 13(2) குறிப்பிடுவதால், இந்த அலுவலகமே பொருளற்றதாகி விட்டது.

காணாமற்போனோர் அலுவலகத்தில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஐநா உள்ளிட்ட அனைத்துலக வல்லுநர்கள் திரும்பத் திரும்ப விடுத்த வேண்டுகோள்களை, இலங்கை அரசாங்கம் மறுதலித்து விட்டது மட்டுமல்லாது, முன்னாள் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரைக் காணாமற்போனோர் அலுவலகத்தில் ஆணையர்களில் ஒருவராகச் சிறிலங்கா அரசாங்கம் சேர்த்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் துயரத்தை, வலிந்து காணாமற்போதல் தொடர்பான ஐ.நா குழுவின் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என இந்நாளில் கோரிக்கை விடுப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாதம் ஊடகசேவை


ENGLISH PRESS RELEASE:

Plight of Sri Lanka’s Tamil Disappeared Must be Brought Before the UN Committee on Enforced Disappearances: TGTE
https://world.einnews.com/pr_news/460033262/plight-of-sri-lanka-s-tamil-disappeared-must-be-brought-before-the-un-committee-on-enforced-disappearances-tgte

Contact: pmo@tgte.org

Transnational Government of Tamil Eelam (TGTE)
TGTE
+1-614-202-3377
email us here