There were 594 press releases posted in the last 24 hours and 155,018 in the last 365 days.

இலங்கைத்தீவின் கேந்திர முக்கியத்துவமும் தமிழர் தரப்பின் தந்திரோபாயங்களும் !! - சுதன்ராஜ்

இலங்கைத்தீவின் கேந்திர முக்கியம்

அனைத்துலக சக்திகளின் இலங்கைத்தீவின் மீதான கேந்திர நலனை, தமிழர் தரப்பு எவ்வாறு தந்திரோபாயமாக கையாளப்போகின்றது என்பது மிக முக்கியமானது.

இலங்கைத்தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை உணர்ந்த அனைத்துலக சக்திகள் தமது காய்களை நகர்த்தி வரும் இவ்வேளையில், அக்காய்களை தமது நலன்களுக்கு ஏற்றவாறு கையாள்வதில்தான் தமிழர் தரப்பின் தந்திரோபாயம் உள்ளது”
— சுதன்ராஜ்
PARIS, FRANCE, August 29, 2018 /EINPresswire.com/ --

இந்தியப் பெருங்கடலில் இலங்கைத்தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை முன்னுணர்ந்தே 'தமிழீழம்' என்ற மூலோபாயத்தை, தந்திரோபாயங்கள் ஊடாக வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொண்டிருந்தார் என ஆய்வாளர் பலரும் குறிப்பிடுவர்.

அவ்வாறே இலங்கைத்தீவினை நோக்கிய அனைத்துலக போர்கப்பல்களின் படையெடுப்பு மட்டுமல்ல, அனைத்துலக பிரதிநிதிகளின் தொடர் படையெடுப்பும் அந்த நம்பிக்கையினை வெளிச்சம் போட்டுகாட்டி வருகின்றது. ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவின் சமீபத்திய இலங்கைப் பயணம் இதனொரு உதாரணமாக கொள்ளலாம்.

திருகோணமலைத் துறைமுகம், அம்பாந்தோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக பயணம் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தது மட்டுமன்றி, சீனாவின் பிரசன்னம் குறித்தான ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரின் கரிசனை என்பது, இத்தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை உணர்த்திக் நிற்கின்றது. (சீனாவைவிட ஜப்பானே இலங்கைக்கான பெருங் கொடையாளி முன்னர் இருந்துள்ளது என்பது இதன் உபரிக்கதை.)

தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை அனைத்துலக சக்திகள் மட்டுமல்ல சிறிலங்கா அரசும் உணர்ந்தே உள்ளது. அதனைத்தான் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரிடம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்கள் வெளிக்காட்டி நிற்கின்றன.

'அடுத்த 20 ஆண்டுகளில் வங்காள விரிகுடா நாடுகள் சடுதியாக வளர்ச்சியடையும். இந்தப் பிராந்தியத்தின் மத்திய துறைமுகமாக திருகோணமலைத் துறைமுகம் மாறும்' என அவர் குறிப்பிட்டுள்ளதோடு திருகோணமலைத் துறைமுகத்தின் அபிவரித்திக்கு ஜப்பானை நோக்கி கை நீட்டியுள்ளார்.

கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் சீனாவை ஒரு கையாலும், மறுகையால் மறுதரப்பையும் கையாளுகின்ற சிறிங்கா அரசின் தந்திரோபாயத்தை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இது ஒருவகையில் கத்தி மேல் நடக்கின்ற ஒரு அரசியல் இராஜதந்திர சாகசம் எனலாம்.

இந்த அனைத்துலக சக்திகளின் இலங்கைத்தீவின் மீதான கேந்திர நலனை, தமிழர் தரப்பு எவ்வாறு தந்திரோபாயமாக கையாளப்போகின்றது என்பது இவ்விடத்தில் மிக முக்கியமானது.

இலங்கைக்கு வரும் பல அனைத்துலக பிரதிநிதிகள் சிறிலங்கா அரச தரப்பை மட்டுமல்ல இரா.சம்பந்தனையும் சந்திக்கத் தவறுவதில்லை. எதிர்கட்சித் தலைவராக, தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவராக மட்டுமல்ல தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்த தரப்பாகவும் இருக்கின்றார்.

இந்நிலையில் இரா.சம்பந்தன் அவர்கள் இவர்களிடத்தில் முன்வைக்கின்ற கருத்துக்கள் எந்த நோக்குநிலையில் இருந்து முன்வைக்கப்படுகின்றன என்பது கேள்விக்குறிதான்.

ஆனால், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அனைத்துலக தரப்புக்களுடானான சந்திப்புக்களில் முன்வைக்கின்ற கருத்துக்கள் நீதிக்காகவும் உரிமைக்காகவும் போராடுகின்ற மக்களின் குரலாகவே காணப்படுகின்றது.

மறுபுறம் தமது நீதிக்கானதும் உரிமைக்கானதுமான போராட்டத்தின் நிகழ்ச்சி நிரலை புலம்பெயர் தமிழர் அரசியற் தரப்பு முன்நகர்த்தி வருகின்றது.

இது கேந்திர முக்கியத்துவத்தினை உணர்ந்த ஒரு அரசியல் செயல்வழிப்பாதையாகவே காண வேண்டியுள்ளது. அந்தவகையில் பிரித்தானியா அரசுக்கு அழுத்தங் கொடுக்கின்ற வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து போராட்டம் என்பது இதில் மிக முக்கியமானதாக உள்ளது.

சுpறிலங்கா அரசு , ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அளித்த வாக்குறுதிகளையும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இடைக்கால நீதியை வழங்குவதை அலட்சியம் செய்யுமிடத்து, எதிர்வரும்மார்ச் 2019ல், இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லும் பிரேரணையை பிரித்தானியா கொண்டு வர வேண்டும் என அக்கையெழுத்துப் போராட்டத்தின் ஊடாக முன்வைக்கப்படுகின்றது.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை இவ்வாறான கையெழுத்துப் போராட்டங்கள் புதிதல்ல. பிரித்தானிய பாராளுமன்ற பொறிமுறையொன்றில் 1 இலட்சம் பொதுமக்கள் கையெழுத்திட்டு ஒரு கோரிக்கையினை முன்வைக்குமிடத்து, அக்கோரிக்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றம் விவாதிக்க வேண்டும். அவ்வாறு பல விடயங்கள் கடந்த காலங்களில் விவாதித்திக்கப்பட்டிருக்கின்றன.

இதனை மையப்படுத்தித்தான் பிரித்தானிய வாழ் மக்களிடையே 1 லட்சம் கையெழுத்துக்களை பெறும் முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

முன்னராக ஐ.நாவை நோக்கிய இதே கோரிக்கையுடன் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் ஒன்றினை நடாத்தியிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பங்களை பெற்று ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளிரிடம் ஒப்படைந்திருந்தது.

தற்போது அவ்வியக்கம் அதன் ஒரு தொடர் செயற்பாடாக பிரித்தானிய பாராளுமன்றினை நோக்கி கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்னராக அமெரிக்காவே சிறிலங்கா தொடர்பிலான தீர்மானங்களை கொண்டு வந்திருந்த போதும், அமெரிக்காவின் ஆட்சிமாற்றத்துக்கு பின்னரான சூழலில், கடைசித் தீர்மானத்தினை பிரித்தானியாவே கொண்டுவந்திருந்தது.

இந்நிலையிலேயே பிரித்தானியாவை நோக்கிய ஒரு அழுத்தமாக இக்கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை ஐ.நா மனித உரிமைச்சபையில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

- ஐ.நா. பாதுகாப்புச் சபை ஊடாக சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவும் அல்லது , இலங்கைக்கான ஒரு சிறப்பு சர்வதேச நீதிமன்றத்தை (International Criminal Tribunal) உருவாக்கவும்.

-இலங்கையின் இடைக்கால நீதி வழிமுறையை கண்காணிப்பதற்கான ஒரு புதிய மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தைக் கொண்டு வருவதுமாகவும்.

- ஐ.நா.மனித உரிமைச் சட்டத்தைப் பின்பற்றாமைக்காக போர்குற்றவாளிகளுக்கும் இன அழிப்புக்காரருக்கும் நுழைவிசை(விசா) வழங்குவதை மறுக்கும்படியும், இருபக்கம் சார்ந்த இராணுவ பொருளாதாரக் கட்டுப்பாடுகளை சிறிலங்கா அரசின் மீது பிரயோகிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம். இத்தோடு ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையாளர் 2017ல் சிபாரிசு செய்த உலகளாவிய நீதி வழியைப் பின்பற்ற வேண்டியதையும் நாம் வலியுறுத்துகிறோம்.

என ஆகிய முக்கிய விடயங்கள் இக்கையெழுத்துப் போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக உள்ளன.

ஐ.நா பாதுகாப்பு சபைக்கு சிறிலங்கா விவகாரத்தினை கொண்டு செல்லும் முயற்சியானது, ஐ.நா மனித உரிமைச்சபையின் நிகழ்ச்சி நிரலில் இருந்து இலங்கை விடுபடுத்திவிடும் என்ற அச்சத்தினை தமிழர்களின் ஒரு தரப்பு முன்வைக்கின்றது.

சிறிலங்காவை மையப்படுத்தி தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமைச்சபையின் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்காவை வைத்திருக்க உதவும் என்பதோடு, சிறிலங்கா ஒரு பேசு பொருளாக இருக்க உதவும் எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் ஐ.நா மனித உரிமைச்சபை என்பது, ஐ.நா பாதுகாப்பு சபை போல் அதிகாரம் உள்ள அமைப்பல்ல. மனித உரிமைகளை உறுதிப்படுத்தவும், மனித உரிமை மீறல்களை அவதானிக்கவும் உதவுகின்ற ஒரு மையம் மட்டுமன்றி, மூன்றாம் உலக நாடுகளுக்கான ஒரு களமாக உள்ளது.

மறுவளமாக குற்றங்களில் ஈடுபட்ட தரப்புக்களை தண்டிக்கவும், தடைகளை விதிக்கவும் வல்ல அதிகாரம் பாதுகாப்புச் சபைக்கே இருக்கின்றது. இதனை சமீபத்திய உதாரணங்களாக வட கொரியா, ஈரான் விவகாரங்களில் காணலாம்.

இந்நிலையில் இலங்கையில் நடந்தேறிய போர் குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான 'பொறுப்புக்களை' ஐ.நா பாதுகாப்புச் சபையும், காணாமல் போனோர், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் போன்ற அடிப்படைய மனித உரிமை மீறல் விவகாரங்களை ஐ.நா மனித மனித உரிமைச்சபையில் பேணலாம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இதற்கு பலஸ்தீன விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபையிலும், மனித உரிமைச்சபையிலும் அவதானிக்கலாம் எனக் தெரிவிக்கின்றது.

கடல்வழிப் போக்குவரத்தினை மையப்படுத்தி, இலங்கைத்தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை உணர்ந்த அனைத்துலக சக்திகள் தமது காய்களை நகர்த்தி வரும் இவ்வேளையில், அக்காய்களை தமது நலன்களுக்கு ஏற்றவாறு கையாள்வதில்தான் தமிழர் தரப்பின் தந்திரோபாயம் உள்ளது.

To Contac Suthanraj : sutharsansivagurunathan@gmail.com

சுதன்ராஜ்
Suthanraj
+33-755-168-341
email us here