There were 1,700 press releases posted in the last 24 hours and 402,168 in the last 365 days.

தமிழர் தலைவிதி தமிழர் கையில்! பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன் புத்தாண்டுச் செய்தி !

Visuvanathan Rudrakumaran

இறுக்கமான பௌத்த பேரினவாத சிங்கள கட்டமைப்பினால் தீர்மானிக்கப்படும் ஏற்பாடுகளைத், தமிழர் தேசத்தின்மீது திணிக்கும் அரசியற் பொறிமுறையினை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது

NEW YORK, USA, January 8, 2018 /EINPresswire.com/ --

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத்தமிழ் மக்களின் அரசியற் செயல்வழிப்பாதையாக தமிழ்மக்களின் அரசியற் தலைவிதியைத் தமிழ்மக்களே தீர்மானிக்கும் வகையில் "தமிழர் தலைவிதி தமிழர் கையில்! பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்" எனும் செயல்முனைப்பினை தனது புத்தாண்டுச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான அரசியற்தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப்புத்தாண்டில் இன்னும் முனைப்பாக முன்னெடுக்கவுள்ளது என்றும் இச்செயல்முனைப்பில் அனைத்து தமிழ்மக்களும் அனைத்து தமிழர் அமைப்புக்களும் அணிதிரள வேண்டும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

மேலும் இறுக்கமான பௌத்த பேரினவாத சிங்கள கட்டமைப்பினால் தீர்மானிக்கப்படும் அரசியல்; ஏற்பாடுகளைத் தமிழர் தேசத்தின்மீது திணிக்கும் அரசியற் பொறிமுறையினை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது சிங்கள தேசத்தின் மேலாண்மையினை நாம் ஏற்றுக் கொண்டதாக அரசியல்ரீதியில் அர்த்தப்படுத்தப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் சிலர் "இதுதான் யதார்த்தம்" என்று தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தி தமிழர் தேசம் சிங்கள தேசத்திடம் நிரந்தரமாக அடிமைப்பட்டுப்போகும் நிலையினை உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சம் எமக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டு அறிக்கையின் முழுவிபரம் :


தமிழ் மக்கள் தமது அரசியற்தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும்!

மலரும் 2018 ஆம் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்பதுடன், ஈழத் தமிழர் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், உலகமெங்கும் தமது உரிமைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப் புத்தாண்டில் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் நிகழ்ச்சிநிரலை தானே தீர்மானிக்கும் வகையில் வியூகம் அமைத்து செயற்படுதல் அவசியமானதாகும். சிறிலங்கா ஆட்சியாளர்களதும், அனைத்துலக அரசுகளதும் நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, எமக்கான அரசியல் அரங்கை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கிறோம்.

கடந்து சென்ற 2017 ஆம் ஆண்டு சிறிலங்கா ஆட்சியாளர்களின் பொய்முகத்தை மேலும் அம்பலப்படுத்தியிருக்கிறது. இருந்த போதும் சிறிலங்கா அரசைப் பாதுகாக்கும் அனைத்துலக அரசுகளின் முயற்சி தொடர்ந்த வண்ணந்தான் இருக்கிறது. புவிசார் அரசியல் சார்ந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவில் தமக்குச் சார்பான ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என உலகின் பலமிக்க அரசுகள் விரும்புகின்றன. இலங்கைத்தீவில் சிங்கள தேசத்தின் அதிகாரமையத்துக்குட்பட்டிருக்கும் சிறிலங்கா அரசைத் தாங்கிப் பிடிப்பது தமது பூகோள அரசியலுக்கு முக்கியமானது என இந்த அரசுகள் எண்ணுகின்றன. கடந்து சென்ற 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்பட்டமையினை இந்த அரசியற்பின்னணியுடன்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சிறிலங்கா அரசினைப் பாதுகாத்து நிற்பது தமிழ் மக்களை இனவழிப்புக்குள்ளாக்கும் இனவாத அரசைப் பாதுகாக்கும் செயல் என்பது குறித்து இந்த அரசுகளுக்கு கவலையேதும் இல்லை. நலன்களின்பாற்பட்டு இயங்குவதுதான் அரசியற்தர்மம் என்ற சமன்பாட்டை இவ் அரசுகள் பின்பற்றும்போது உலகில் ஒடுக்;கப்பட்ட மக்கள், அரசற்ற சிறிய தேசிய இனங்கள் தமது அரசியற்கனவுகளை, அரசியற்பெருவிருப்புகளை, தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்கான வழிவகைகள் குறித்து சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதற்காக வியூகம் அமைத்து செயற்பட வேண்டியவர்களாக உள்ளார்கள். 2017 ஆம் ஆண்டில் குர்திஸ்தானிலும் கத்தலோனியாவிலும் நடைபெற்ற தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்புகளை நாம் இவ்வாறுதான் புரிந்து கொள்ள முடியும்.

தமிழீழ மக்களும் 2018 ஆம் ஆண்டில் பலமிக்க அரசுகளாலும் சிறிலங்கா அரசாலும் ஏற்கனவே வகுக்கப்பட்ட அரசியற்திட்டங்களுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிராமல் எமக்கான அரசியற்திட்டத்தை நாமே முன்னோக்கி நகர்த்த வேண்டியது அவசியமானதாகும். அரசுகளின் ஆதரவு இல்லாமல் நாம் எவ்வாறு எமது திட்டத்தில் வெற்றியடைய முடியும் என்ற கேள்வி இவ்விடத்தில் பலருக்கும் எழலாம். மாறிவரும் தற்போதைய உலகஒழுங்கிலும், அனைத்துலக சட்டங்களிலும், நாடற்ற இனங்களாலும், அமைப்புக்களாலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய அரசியல் சட்ட வெளிகள் இருப்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அரசுகளின் விருப்பத்தை வெறுமனே நிறைவேற்றும் சேவகர்களாகத் தமிழ் மக்கள் இருக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும். தமிழ் மக்களின் நலன்களையும் அரசுகளின் நலன்களையும் ஒரேகோட்டில் இணைய வைக்கக்கூடிய வழிவகைகள் குறித்து நாம் சிந்திக்க முடியுமே தவிர அரசுகளின் நலன்கைள நிறைவேற்றிக் கொடுக்கும் எடுப்பார் கைப்பிள்ளைகளாக தமிழ்மக்கள் இருக்க முடியாது.

இப் புதிய ஆண்டில் நாம் முன்னிறுத்த வேண்டிய முக்கியமான நிலைப்பாடாக எமது அரசியற் தலைவிதியியை நாமே தீர்மானிக்கும் உரிமையினை வலியுறுத்தல் அமைகிறது. தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியற்தீர்வும் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுதல் முக்கியமானது. இது தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டின்பாற்பட்ட அடிப்படையான உரிமையாகும். தமிழீழ மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வும் இனப்படுகொலையிலிருந்த தமிழர் தேசத்தைப் பாதுகாக்கக்கூடியவகையில், தமிழ் மக்களுக்கான ஈடுசெய்நீதியின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தமிழீழ மக்களுக்கு ஈடுசெய்நீதியின் அடிப்படையிலான அரசியற்தீர்வு அவசியம் என்பதனை வலியுறுத்துகிறது.

இறுக்கமான பௌத்த பேரினவாத சிங்கள கட்டமைப்பினால் தீர்மானிக்கப்;படும் அரசியல்; ஏற்பாடுகளைத் தமிழர் தேசத்தி;ன்மீது திணிக்கும் அரசியற் பொறிமுறையினை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது சிங்கள தேசத்;தின் மேலாண்மையினை நாம் ஏற்றுக் கொண்டதாக அரசியல்ரீதியில் அர்த்தப்படுத்தப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் சிலர் «இதுதான் யதார்த்தம்» என்று தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தி தமிழர் தேசம் சிங்;கள தேசத்திடம் நிரந்தரமாக அடிமைப்பட்டுப்போகும் நிலையினை உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சம் எமக்கு உண்டு.

ஒரு பிழையான அரசியல் ஏற்பாட்டுக்கு என்ன காரணத்துக்காகவேனும் தமிழ் மக்கள் சம்மதம் தெரிவித்தால் அதில் இருந்து மீளுவது தற்போதய அரசியல் ஒழுங்கில் இலகுவாக இருக்காது. சிறிலங்காவின் புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் அதனைத் தமிழ் மக்களிடம் திணிக்கும் முயற்சிகளுக்குத் தமிழ்த் தலைவர்கள் எவரும் துணைபோவார்களாக இருப்பின் ஒரு பிழையான அரசியல் ஏற்பாட்டைத் தமிழ் மக்கள் மத்தியில் திணித்து அடிமைச்சாசனம் எழுதினார்கள் என்ற வரலாற்றுப் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள் என்பதனை இப்போதே பதிவு செய்ய விரும்புகிறோம். சிறிலங்காவின் புதிய அரசியல்யாப்புத் தொடர்பாக வெளிவந்த இடைக்கால அறிக்கை சிங்கள தேசத்தின் ஆதிக்கத்தின் கீழ் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்பதனை மீண்டுமொருமுறை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழ் மக்கள் இவ் விடயத்தில் தொலைநோக்குப்பார்வையுடன் தெளிவான முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

தமிழ் மக்களின் அரசியற்தலைவிதியைத் தமிழ் மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான அரசியற்தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப் புத்தாண்டில் முனைப்பாக முன்னெடுக்கவுள்ளது. இதற்காக «தமிழர் தலைவிதி தமிழர் கையில்! - பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்» எனும் மக்கள் அமைப்பினை நாம் உருவாக்கியுள்ளோம். இவ் அமைப்பின் தலைமை நிறைவேற்றுச் செயலகம் கனடாவில் நிறுவப்பட்டுள்ளதென்பதனையும், இச் செயலகத்தின் தலைமை நிறைவேற்றுச் செயலாளராக திரு நிமால் விநாயகமூர்த்தி செயற்படுவார் என்பதனையும் நாம் மக்களுக்கு அறியத் தருகிறோம்.

இப் புத்தாண்டின் முதற் திகதியிலிருந்து (01.01.2018) தனது பணிகளை ஆரம்பிக்கும் இத் தலைமை நிறைவேற்றுச் செயலகம் அனைத்துலகரீதியாக இம் மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்துச் செயற்படும். இம் மக்கள் இயக்கத்தோடு இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் அனைத்து மக்கள் அமைப்புகளையும் தோழமையுடன் அழைக்கிறோம்.

இம் மக்கள் இயக்கத்துடனான தொடர்புகளுக்குரிய தொலைபேசி இலக்கமாக+1 416 751 8483, Ext. 2
மின்னஞ்சல் முகவரியாக referendum@tgte.org ஆகியன இருக்கும் என்பதனையும் மக்களுக்கு அறியத் தருகிறோம்.

பொறுப்புக்கூறல் விடயத்திலும் ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல், கடந்தாண்டு தமிழ்மக்களாலும், மனித உரிமை அமைப்புக்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு முரணாக சிறிலங்காவுக்கு மேலதிகமாக இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டது. இவ்விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. வெறுமன பார்வையாளர்களாக நாம் இதனை அவதானித்துக் கொண்டு இருக்கப் போவதில்லை.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரினால் அண்மைக்காலங்களில் குறித்துரைக்கபட்ட விடயமமாகவும், பாதிக்கப்பட்டோருக்கான நீதிகோரும் மாற்றுவழிகள் எனும் தலைப்பில் கடந்த ஆண்டு பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட கையேட்டில் குறிப்பிடப்பட்டது போலவும், உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் (universal jurisdiction) பல்வேறு நாடுகளில் வழங்குகளை தொடரும் முனைப்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

மேலும் பல்வேறு நாடுகளில் இருக்கும் பொறுப்புகூறல் சட்டங்களின் கீழ்(Magnitsky style law - sanction) ரொகிங்கியப் படுகொலைகள் தொடர்பாக மியான்மார் நாட்டு அரசு மற்றும் இராணுவ தலைர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் போன்றவை போல், சிறிலங்காவின் அரச மற்றும் இராணுவ தலைவர்களுக்கு எதிராக கொண்டு வரும் முனைப்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடும். இச்செயல்முனைப்பில் கூட்டாக பணியாற்றுவதற்கு அமெரிக்காவில் இடம்பெற்றிருந்த மூலோபாய கூட்டத்தில் பங்கெடுத்திருந்த பல புலம்பெயர் அமைப்புகள் முன்வந்துள்ளன என்ற செய்தியினையையும் இவ்வேளை தங்களுக்கு மகிழ்வோடு அறியத்தருகின்றேன்.

தாயகத்தில் தமிழ் மக்கள் மேற்கோள்ளும் அரசியல்தீதியான போராட்டங்கள்; மலரும் புத்தாண்டில் மேலும வளர்த்தெடுக்கப்படவேண்டியதும் அவசியமானதாகும். தாயகத்தில் நடைபெறும் அரசியற்போராட்டங்களுக்கும், தாய்மார்களால் ஓய்வின்றி முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களுக்கும் துணையாக எமது தோழமைப் போராட்டங்களை ; புலம் பெயர் நாடுகளில் தொடர்ந்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமமுன்னெடுக்கும். இப் புத்தாண்டில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னோக்கிப் பயணிக்கும் என்ற நம்பிக்கையுடன் நமது பணிகளை நாம் தொடர்வோமாக!

நன்றிஇ தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இவ்வாறு பிரதம் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact: pmo@tgte.org

நாதம் ஊடகசேவை

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1-212- 290- 2925
email us here