There were 1,712 press releases posted in the last 24 hours and 402,386 in the last 365 days.

சிறிலங்காவைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவுக்கும் காலநீடிப்பினை கொடுத்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

Families of the Disappeared

சிறிலங்காவின் அரசியல், படையியல் நிறுவன அமைப்பின் தலைவர்களுக்கும் எதிராக வெளிநாடுகளில் வழங்குகளைத் தொடுப்பதற்கான வல்லுனர் குழு ஒன்றினையையும் நியமித்துள்ளது

JAFFNA, SRI LANKA, March 28, 2017 /EINPresswire.com/ --

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவுக்கு காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவை கண்காணித்து வந்;த பன்னாட்டு நிபுணர் குழுவின் செயற்பாட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் காலநீடிப்பினை வழங்கியுள்ளது.

இதேவேளை உலகளாவிய மேலுரிமையின்படி சிறிலங்காவின் அரசியல், படையியல் நிறுவன அமைப்பின் தலைவர்களுக்கும் எதிராக வெளிநாடுகளில் வழங்குகளைத் தொடுப்பதற்கான வல்லுனர் குழு ஒன்றினையையும் நியமித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில், பாதிப்புற்ற தமிழ் மக்கள் அடுத்த ஈராண்டுக் காலம் நிலைமாற்ற நீதிச் செயல்வழியைக் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அதனைக் கையிலெடுக்க அவர்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள். முகிழ்த்து வரும் பன்னாட்டு உறவுகளும் பன்னாட்டுச் சட்டமும் இன்று அதற்கான வெளிகளைத் தோற்றுவிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. மனித உரிமை மன்றம் நீதிக்கான மேடைகளில் ஒன்று மட்டுந்தான், இன்றைய நிலையில் அது பயனற்றது என்று தெரிந்து விட்டது.

இந்நிலையில் மேற்குறித்த இரண்டு செயற்முனைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உடனடியாகப் கையிலெடுப்பதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

1. பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழுவுக்குத் தரப்பட்ட கட்டளையை நீட்டிக்கும். மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அளித்த அறிக்கையையும் மனித உரிமை மன்ற உறுப்பரசுகள் தெரிவித்த கருத்துகளையும் கணக்கில் கொண்டு மனித உரிமை மன்றத் தீர்மானத்துக்கு விளக்கமளிப்பதும், சிறிலங்கா அதற்கிணங்க நடப்பதைக் கண்காணிப்பதும் அதன் பணிகளாக இருக்கும்.

2. சிறிலங்கா அரசுக்கும் சிங்கள அரசியல், படையியல் நிறுவன அமைப்பின் தலைவர்களுக்கும் எதிராகப் புலனாய்வு செய்து, சாட்சியத்தைப் பகுத்தாய்ந்து வழக்குக் கோப்புகள் திரட்டிக்கட்டும் பணிக்காகச் சட்டத்தரணிகள், புலனாய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்கும். பல்வேறு நாடுகளிலும் உலகளாவிய மேலுரிமையின்படியான உள்நாட்டு வழக்காடலுக்கு உதவுவது இதன் நோக்கமாக இருக்கும்.

இவ்வாறு குறித்த செயல்முனைப்பு குறித்து பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு :

ஈராண்டு ஆனால் என்ன, இருபதாண்டு ஆனால் என்ன, சிறிலங்காவுக்கு எல்லாம் ஒன்றுதான் !
அல்லலுற்ற மக்கள் அனைத்து முனைகளிலும் அயராது போராடுவது தவிர வேறு வழியில்லை!

மீண்டும் ஒரு முறை, பாதிப்புற்ற தமிழ் மக்கள் பன்னாட்டுச் சமுதாயத்தின் கவலையற்ற தன்மனநிறைவில் மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள். சிறிலங்கத் தீவு நாட்டில் ஆயுத மோதலின் போது அந்நாட்டு அரசு புரிந்த குற்றங்களால் பாதிப்புற்ற மக்களுக்கு இம்முறையும் நீதி கிடைக்காமலே போய் விட்டது.

சிறிலங்காவை ஐநா சாசனத்தின் உறுப்பு 22ன் படி சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்கும் பரிந்துரையோடு ஐநா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புங்கள், அல்லது ரோமாபுரிச் சட்டத்தின் 13(ஆ) உறுப்பின்படி அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் பரிந்துரையோடு ஐநா பாதுகாப்பு மன்றத்தின் பார்வைக்கு அனுப்புங்கள் என்று அல்லலுற்ற தமிழ் மக்கள் திரும்பத் திரும்ப உளமார வேண்டினார்கள். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மனித உரிமை மன்றம் 30/1 (2015 அக்டோபர்) தீர்மானத்தின்படியான கடப்பாடுகளை நிறைவேற்ற சிறிலங்காவுக்கு ஈராண்டு கால நீட்டிப்புத் தரும் தீர்மானத்தை இயற்றி விட்டது.

சிறிலங்கா நாளது வரை எடுத்துள்ள முயற்சிகளைக் கடுமையாகக் குறை சொல்லி உயர் ஆணையர் கொடுத்துள்ள அறிக்கையையும், கலப்புத் தீர்ப்பாயம் அமைக்க அவர் மீண்டும் விடுத்துள்ள அழைப்பையும் மீறி இந்த அநியாயக் கால நீட்டிப்பை மனித உரிமை மன்றம் வழங்கி விட்டது.

சிறிலங்காவுக்கு ஈராண்டுக் கால நீட்டிப்பு வழங்கியிருப்பதன் பொருள் குற்றவாளிகளைத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதில் மனித உரிமை மன்றமும் உடந்தையாகி விட்டது என்பதே.

இந்தச் செயல் மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கிறது - அரசுசார் நிறுவனங்கள் பொதுவான மானிட இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதில்லை என்பதை. இதற்கிடையில் ஐநா உயர் ஆணையர் தனித்தனி உறுப்பரசுகள் பன்னாட்டுக் குற்றங்கள் புரிந்தோரைப் புலனாய்வு செய்து வழக்குத் தொடுத்திட அழைப்பு விடுத்துள்ளார். ஆணையரே கூட அரசுசார் நிறுவனங்களில் நம்பிக்கை இழந்து கொண்டிருப்பதான எண்ணத்தையே இது ஏற்படுத்துகிறது.

உறுதி செய்யப்பட தகவலின்படியே உயிர்ப்பலியான 70 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குறித்தும் அவர்தம் குடும்பத்தினர் குறித்தும் மனித உரிமை மன்றம் விடாப்பிடியாகப் பாராமுகமாய் இருப்பது மனித உரிமைகள் என்ற கருத்தே பரவலாக அடிவாங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்நிறுவனத்தின் நம்பகத் தன்மையை அரித்தெடுக்கவே செய்யும்.

சென்ற 2016 டிசம்பர் 19ம் நாள் ஐநா பொதுப்பேரவை சிரியாவுக்கான நடுநிலைத் தற்சார்புப் பன்னாட்டுப் பொறிமுறையை நிறுவியது. இவ்வாறு, சாட்சியங்களை அழியாது காக்கவும், பன்னாட்டுக் குற்றங்களைப் புலனாய்வு செய்யவும் ஒரு பன்னாட்டுப் பொறிமுறை உருவாக்கப்பட்டது. மனித உரிமை மன்றம் இதேபோன்ற நடவடிக்கை எடுத்து, சிறிலங்கா அரசுக்கும் தமிழ் மக்களுக்குமான ஆயுத மோதலின் போது அந்நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுக்கான சான்றுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

மனித உரிமை உயர் ஆணையரும் எஸ்தோனியாவும் சிறிலங்கா அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இணங்கி இணைந்து கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்ததையும் நாம் கவனத்தில் கொள்கிறோம். சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளுடன் கடந்த 2015ஆம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பத்து இலட்சம் கையொப்ப இயக்கம் நடத்திய போது உலகெங்கும் 16 இலட்சம் மக்கள் அதில் பங்கேற்றார்கள்.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை முன்னிறுத்த வேண்டும் என்ற எமது கோரிக்கை மனமயக்கத்திலிருந்து விளைந்ததன்று. சிறிலங்கா அரசே இனக்கொலைக் குற்றமும் மானிடத்துக்கெதிரான குற்றங்களும் போர்க்குற்றங்களும் புரிந்துள்ளது என்பதும், நெகிழ்ந்து கொடுக்காத இனநாயகத் தன்மை கொண்ட சிறிலங்க அரசு தமிழர்களுக்கு நீதி வழங்காது என்பதுமான உண்மையை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கையே அது.

உயர் ஆணையர் தமது வாய்மொழி முன்வைப்பில் கூறியதாவது: 'கடுங்குற்றங்களைத் திறமான விதத்தில் புலனாய்வு செய்து வழக்குத் தொடுத்துத் தண்டிக்கத் தவறுவதில் முன்பின் முரணற்ற தொடர்ச்சி காணப்படுகிறது. இது பொதுவான அளவில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலுள்ள தயக்கம் அல்லது அச்சத்தின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது.

சிறிலங்கப் பாதுகாப்புப் படைகள் 99மூ சிங்களர்களைக் கொண்டவை. ஆனால் பாதிப்புற்றவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தமிழர்களே. இந்நிலையில் ஈராண்டோ இருபதாண்டோ நீட்டிப்புத் தருவது, அனைத்து வகையிலும் தொழில்நுட்ப உதவியும் நிதி உதவியும் வழங்குவது, சாலச் சிறந்த அரசதந்திர நுணுக்கங்கள் எல்லாமே சிறிலங்காவுக்கு ஒன்றுதான். தேவைப்படுவது அறத் துணிவு, சிங்கள அரசியல், படையியல் நிறுவன அமைப்பில் கண்கூடாகக் காணாமல் போயிருப்பதும் அதுதான்.

நீதிக்கான தமிழர் வேட்கையும், பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்குமான அவர்களின் வேட்கையும் ஒன்றில் ஒன்றானவையே தவிர ஒன்றுக்கொன்று மாறானவை அல்ல. இதைக் கருத்தில் கொண்டுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிலைமாற்ற நீதிச் செயல்வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. குற்றத்துக்குத் தண்டனையில்லை என்ற கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஈடுசெய் நீதிக் கனவு மெய்ப்பட வேண்டும், அதாவது ஈழத் தமிழர்களின் தன்-தீர்வு (சுயநிர்ணய) உரிமையின் அடிப்படையிலான அரசியல் தீர்வு என்ற வடிவில் இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பவை அதன் நோக்கங்கள்.

ஈராண்டுக் கால நீட்டிப்பு குறித்து எங்களுக்குள்ள உடனடிக் கவலை சிறிலங்கப் பாதுகாப்புப் படைகள் தமிழர்களுக்கு எதிராக மேலும் பன்னாட்டுக் குற்றம் புரியவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடவும் அது துணிச்சலும் ஊக்கமும் கொடுக்கும் என்பதே. ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் இலங்கைத் தீவின் வடக்குகிழக்கில் தமக்கான அலுவலகங்கள் அமைத்து, மனித உரிமைக் கண்காணிப்பாளர்களைக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவர்களில் பாலியல் மற்றும் பால்சார்ந்த வன்முறை தொடர்பான வல்லுநர்களும் இடம்பெற வேண்டும். இன்றளவும் 'வல்லுறவு முகாம்கள்' வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சிறிலங்கப் பாதுகாப்புப் படைகளின் வன்முறைக்கும் பெருமளவிலான பாலியல் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் பொருட்டு மனித உரிமைப் பெண் அலுவலர்கள் அங்கு நிறுத்தப்படுவது அதிமுக்கியமானது.

பாதிப்புற்ற தமிழ் மக்கள் அடுத்த ஈராண்டுக் காலம் நிலைமாற்ற நீதிச் செயல்வழியைக் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அதனைக் கையிலெடுக்க அவர்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள். முகிழ்த்து வரும் பன்னாட்டு உறவுகளும் பன்னாட்டுச் சட்டமும் இன்று அதற்கான வெளிகளைத் தோற்றுவிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. மனித உரிமை மன்றம் நீதிக்கான மேடைகளில் ஒன்று மட்டுந்தான், இன்றைய நிலையில் அது பயனற்றது என்று தெரிந்து விட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உடனடியாகப் பின்வருவனவற்றைக் கையிலெடுக்கும்:

1. பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழுவுக்குத் தரப்பட்ட கட்டளையை நீட்டிக்கும். மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அளித்த அறிக்கையையும் மனித உரிமை மன்ற உறுப்பரசுகள் தெரிவித்த கருத்துகளையும் கணக்கில் கொண்டு மனித உரிமை மன்றத் தீர்மானத்துக்கு விளக்கமளிப்பதும், சிறிலங்கா அதற்கிணங்க நடப்பதைக் கண்காணிப்பதும் அதன் பணிகளாக இருக்கும்.

2. சிறிலங்கா அரசுக்கும் சிங்கள அரசியல், படையியல் நிறுவன அமைப்பின் தலைவர்களுக்கும் எதிராகப் புலனாய்வு செய்து, சாட்சியத்தைப் பகுத்தாய்ந்து வழக்குக் கோப்புகள் திரட்டிக்கட்டும் பணிக்காகச் சட்டத்தரணிகள், புலனாய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்கும். பல்வேறு நாடுகளிலும் உலகளாவிய மேலுரிமையின்படியான உள்நாட்டு வழக்காடலுக்கு உதவுவது இதன் நோக்கமாக இருக்கும்.

உலகம் ஈராண்டுக் காலத்தில் சிறிலங்காவிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம். ஆனால் முடிவில் கிடைக்கப்போவது ஆற்றொழுக்கான உரைவீச்சில் ஒளிந்து கொள்ளும் வெற்றுப் பேச்சாகவே இருக்கும் – மூன்று வாரம் முன்பு ஜெனிவாவில் அந்நாட்டின் அயலுறவுத் துறை அமைச்சர் ஆற்றிய உரையைப் போலவே! சிறிலங்காவில் நீக்கமற்ற நிறைந்திருக்கும் இனநாயகச் சூழலில் வளைந்து நெளிந்து சமாளிப்பதற்கு இடமே இல்லை.

பெருந்தொகையான எம்மவர்களை அழித்தொழிக்கவும், இலங்கைத் தீவில் எமக்குள்ள தனித்துவமான
அரசியல், பொருளியல், ஆட்சிப்புலத்தியல் அடிப்படையை இல்லாமற்செய்யவும் நடந்த முயற்சிகளில் தமிழ்த் தேசம் தப்பிப் பிழைத்துள்ளது. ஒரு தேசத்துக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றங்கள் இழைக்கப்படும் போது, நீதி என்பது இயற்கை உரிமை ஆகும்.

அந்த உரிமையை மெய்ப்படச் செய்வதற்காக நாம் தொடர்ந்து பாடாற்றுகின்றோம். அல்லலுற்ற தமிழ் மக்களும் சரி, அவர்களின் நன்னலம் கருதி உழைப்போரும் சரி, தோல்வியால் துவண்டு போய் விடாமல், நெருங்கி ஒன்றுசேர்ந்து, மானிடத்தில் நம்பிக்கை வைத்து, அனைவருக்குமான நீதிக்கும் சுதந்திர வாழ்வுக்குமாகத் தொடர்ந்து போராட வேண்டும். இந்த இலட்சியங்களை நம்புவோர் எமது போராட்டத்தில் இணைந்து பணியாற்ற வாருங்கள் என வேண்டி அழைக்கிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English link: http://world.einnews.com/pr_news/372741343/two-years-or-twenty-years-make-no-difference-to-sri-lanka-tamil-victims-keep-fighting-for-justice-in-all-fronts-tgte

நாதம் ஊடகசேவை

Transnational Government of Tamil Eelam
TGTE
+12122902925
email us here