ஈழத்தமிழர் சிறப்பு முகாம்களை மூடும்படி தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின்க்கு வி. உருத்திரகுமாரன் வேண்டுகோள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்ச் 20 ந் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
சிறீ லங்காவில் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதன் காரணமாக முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தின் கீழ் உரித்துடையவர்கள்”
CHENNAI, INDIA, March 24, 2023/EINPresswire.com/ -- ராபர்ட் பயஸ், முருகன், சாந்தன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்யும்படியும், ஈழத்தமிழர் சிறப்பு முகாம்களை மூடும்படியும் பிரதமர் திரு. வி. உருத்திரகுமாரன், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம். — பிரதமர் திரு. வி. உருத்திரகுமாரன்
இக் கடிதத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படக் காரணமாக இருந்த நிலைமைகள் மாறி விட்டன என்றும், அதன் அடிப்படையில் ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை ஒரேயடியாக மூடி நெடுங்காலமாக இருந்து வரும் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கேட்டுள்ளார்.
இக் கடிதத்தில், பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி, ராபர்ட் பயஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகியோருக்கு முன்-விடுதலை வழங்க 09-09-2018 இல் தமிழ்நாடு அமைச்சரவை முடிவெடுத்த பிறகும், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை விடுதலை செய்யாமலிருந்த போது, முதலில் பேரறிவாளன் சார்பிலும், பிறகு மற்ற அறுவர் சார்பிலும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற போது தமிழக அரசின் சார்பில் அவர்களது விடுதலைக்கு ஆதரவாக நிலையெடுத்து அவர்களது விடுதலைக்கு உதவியமைக்காக ஈழத் தமிழர்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நீண்ட முப்பத்திரண்டு வருட கால சிறைவாசம், சிறையில் அவர்களுடைய நன்னடத்தை, சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர்களுடைய கல்வி, பட்டப் படிப்புகள், அவர்களுடைய உடல்நிலைமை (நீடித்த நோய்கள்) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்திய உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் ராபர்ட் பயஸ், முருகன், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல் திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமில் அடைபட்டிருப்பது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாகவும் இக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இக் கடிதத்தில் சிறீ லங்காவில் இன்னும் தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள், அவர்களது ஆதரவாளர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதன் காரணமாக முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் நிவாரணத்திற்கு உரித்துடையவர்கள் என்றும், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டவர்களுக்கு, அவர்களுடைய தண்டணைக்காலம் முடிந்தபின்னர், அமெரிக்க குடிவரவு நீதிமன்றம் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்களுக்கு அமெரிக்காவில் தங்கும் உரிமையையும், அமெரிக்க குடிவரவு நிறுவனம் அவர்களுக்கு வேலை செய்யும் உரிமையையும் வழங்கியுள்ளமையையும் சுட்டிக் காட்டியுள்ளார். முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கும் பல்வேறு நாடுகளில் இவ்வாறான உரிமைகளைப் பெறலாம் எனக் கருதுவதாகவும் இதற்கான முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடும் என்றும், இத்தகைய முயற்சிக்கான ஏற்பாட்டு உதவியை (logistical help) தமிழக அரசு செய்து தரும்படியும் கேட்டுள்ளார்.
இறுதியாக இக் கடிதத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படக் காரணமாக இருந்த நிலைமைகள் மாறி விட்டன என்றும், அதன் அடிப்படையில் ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை ஒரேயடியாக மூடி நெடுங்காலமாக இருந்து வரும் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கேட்டுள்ளார்.
ஊடக அமைச்சு,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam
TGTE
+16142023377 ext.
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter
Instagram

